Angus Kennedy
Angus KennedySWNS

“இப்போ நான் சிங்கிள்தான்.. நீங்களும் சிங்கிள்னா..” - விவாகரத்தானதை கொண்டாடிய 58 வயதான தந்தை!

58 வயதான நபர் ஒருவர் 23 ஆண்டுகால திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்ததை கொண்டாடியிருக்கிறார்.

தனி மனிதரின் வாழ்க்கையில் துணையை பிரிவது என்பது எப்போதுமே ஒரு வருத்தமான நிகழ்வாகவே இருக்கும். இருப்பினும் புரிதல் இல்லாத காரணத்தால் வேறு வழியில்லாமல் விவாகரத்து என்ற பெயரில் பிரிவோர்களின் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்து வருவதோடு அந்த விவாகரத்தை கொண்டாடுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அண்மையில் கூட பெண் ஒருவர் தனக்கு கிடைத்த விவாகரத்தை ஃபோட்டோஷூட் எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். அந்த வகையில் 58 வயதான நபர் ஒருவர், தன் 23 ஆண்டுகால திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்ததை கொண்டாடும் விதமாக தனது காரில் தனக்கு விவாகரத்து ஆகிவிட்டது என்றும் தான் சிங்கிளாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது சமூக வலைதளத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

அதன்படி, ஆங்கஸ் கென்னடி என்ற 58 வயதான நபருக்கும் சோஃபி கென்னடி என்ற 47 வயதான பெண்ணுக்கும் இடையேயான 23 ஆண்டு திருமண வாழ்க்கை இணக்கமான முறையில் முடிவுற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து லண்டனின் பிரபல செய்தி தளத்திடம் பேசியுள்ள ஆங்கஸ் கென்னடி, “விவாகரத்தை எப்போதும் ஏதோ ஒரு பேரழிவாகவோ, இருளாகவோ கருதக்கூடாது. ஒரு புது வாழ்வுக்கான தொடக்கமாகக் கூட இருக்கலாம். நானும் சோஃபியும் இப்போதும் நண்பர்களே. எங்களுக்கிடையேயான உறவுதான் முறிந்திருக்கிறது. ஆனால் பகைமை என எதுவுமே இல்லை” என்றிருக்கிறார்.

பரஸ்பர சம்மதத்தோடு இருவரும் பிரிவதாக முடிவெடுத்த பிறகு கடந்த 2021ம் ஆண்டு ஜூலையில் விவாகரத்துக்கு விண்ணப்பித்ததும், தங்களது 11 மற்றும் 23 ஆகிய வயதுக்கிடையே உள்ள 5 குழந்தைகளுடன் ஈக்வடாருக்கு இடம்பெயரவும் திட்டமிட்டிருந்தார்கள்.

பிரபலமான சாக்லேட் நிபுணராக இருக்கும் ஆங்கஸ், தென் அமெரிக்காவில் கோகோ பண்ணையை நிர்வகிக்கும் வாய்ப்பை பெற்றிருந்தார். இந்த நிலையில்தான் சோஃபி, ஆங்கஸின் விவாகரத்து ஒருவழியாக முடிவுக்கு வந்த நடப்பு ஜனவரியின் போது கிடைத்திருக்கிறது.

இதனையடுத்தே தன்னுடைய காரின் பேனெட்டில் ஆங்கஸ் “விவாகரத்தாகிவிட்டது” என ரோஜா பூக்களையும் ரிப்பன்களையும் கட்டி வெளிப்படுத்தியதோடு, கார் ஜன்னல்களில் “சுதந்திரம் கிடைத்துவிட்டது” , “நீங்களும் சிங்கிளாக இருந்தால் ஹார்ன் அடியுங்கள்” என்றும், “ஒருவழியாக சிங்கிள் ஆகிவிட்டேன்” என்றெல்லாம் அலங்காரம் செய்து பொதுவெளியில் உலா வருகிறார்.

இப்படியெல்லாம் செய்வதால், தான் திருமண உறவுக்கு எதிரானவன் இல்லை என்பதை சுட்டிக்காட்டியதோடு, வெறும் விளையாட்டுக்காகவும் குறும்புக்காவுமே இப்படி செய்ததாகவும் ஆங்கஸ் கென்னடி தெரிவித்திருக்கிறார்.

Angus Kennedy
‘அது பூனையில்ல, என் அப்பா’- மனைவியால் கதிகலங்கிய கணவனுக்கு விவாகரத்து நோட்டீஸ்! என்ன நடந்தது?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com