
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் -ஐ போல் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி செயல்படுவதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் விமர்சித்துள்ளார்.
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார். ரமலான் நோன்பில் பாஜக தலைவர் கலந்து கொண்டதை அவர் விமர்சனம் செய்திருந்தார். அதற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், மம்தா பானர்ஜியை, கிம் ஜாங் உன்- ஐ போல் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உடன் ஒப்பிட்டு கிரிராஜ் சிங் விமர்சித்துள்ளார்.
நிதி ஆயோக்கினால் எவ்வித பயனும் இல்லை என்றும் பழைய திட்ட ஆணைய முறையை கொண்டு வர வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். அத்தோடு, நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் எனவும் அவர் தெரிவித்து விட்டார். மம்தாவின் இந்த அறிவிப்புக்கு கிரிராஜ் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், “உரக்க குரல் எழுப்புபவர்களை கொல்லும் கிம் ஜாங் உன்- ஐ போல் மம்தா செயல்படுகிறார். யாரும் வெற்றி பேரணியை நடத்த அவர் அனுமதிக்கவில்லை. மம்தா பானர்ஜி அரசை நடத்தும் விதத்தை பார்த்தால் அவர் அரசியலமைப்பு சட்டத்தை நம்புவதாக தெரியவில்லை. பிரதமரை அவர் பிரதமராகவே கருதுவதில்லை. மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். அவரது கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. ஏனெனில் மக்கள் வளர்ச்சியை விரும்புகிறார்கள்” என்றார்.
மக்களவைத் தேர்தலில் மேற்குவங்கத்தில் பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. 18 இடங்களில் பாஜக வெற்றி பெற்றதோடு, ஆளும் திரிணாமூல் காட்சிக்கு நிகராக பாஜகவின் வாக்குவங்கி சதவீதமும் உயர்ந்தது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் பேரணி நடத்த பாஜகவினர் அனுமதி கோரியிருந்தனர். ஆனால், மம்தா தலைமையிலான அரசு அதற்கு அனுமதி மறுத்துவிட்டது.