மேற்கு வங்கம்: 2 கி.மீ. தூரம் பேரணியாகச் சென்று வேட்புமனு தாக்கல் செய்த மம்தா!
மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல் செய்தார். கட்சித் தலைவர் சுப்ரதா பக்ஷி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பேரணியாக சென்று வேட்பு மனுவை மம்தா தாக்கல் செய்தார்.
மேற்கு வங்க மாநிலம் பவானிபூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றிருந்த மம்தா பானர்ஜி இம்முறை நந்திகிராம் தொகுதிக்கு மாறியுள்ளார்.
மம்தா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சுவேந்து அதிகாரி, பாரதிய ஜனதாவிற்கு மாறி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். நந்திகிராம் மண்ணின் மகனான தன்னை எதிர்த்து மம்தா போட்டியிடுவாரா என்றும் சுவேந்து சவால் விட்டார். நந்திகிராமில் மம்தா போட்டியிட்டால் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்துவேன் என்றும், அதை செய்யத் தவறினால் அரசியலை விட்டே விலகப் போவதாகவும் சுவேந்து அதிகாரி தெரிவித்திருந்தார்.
இச்சவாலை ஏற்றுக்கொண்டு நந்திகிராம் தொகுதியில் மம்தா போட்டியிடுகிறார். எனினும், தங்கள் கட்சியில் இருந்ததால்தான் நந்திகிராமில் சுவேந்து அதிகாரியால் வெல்ல முடிந்தது என்றும், தற்போது அவர் பாஜகவுக்கு மாறிவிட்டதால் தோல்வி உறுதி என்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் விமர்சித்து வருகிறார்கள். இத்தொகுதியில் சுவேந்து அதிகாரி நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.