"கூட்டமே வராததால் விரக்தியில் இருக்கிறார் அமித் ஷா!" - மம்தா
"அமித் ஷா தனது பிரசாரப் பேரணிகளில் கூட்டங்கள் வராததால் விரக்தியில் இருக்கிறார்" என்று தேர்தல் பிரசாரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.
மேற்கு வங்கத்தில் தேர்தல் களத்தில் அனல் பறக்கும் நிலையில், அம்மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பல்வேறு இடங்களில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி பிரசாரங்களில் ஈடுபட்டார். அவற்றில் பேசியது:
"மத்திய உள்துறை அமைச்சரின் பணி நாட்டை நடத்துவதா அல்லது யார் கைது செய்யப்படுவார்கள் அல்லது யார் தாக்கப்படுவார்கள் என்பதை முடிவு செய்வதா?
எந்த நிறுவனம் யாரைத் துரத்துவது என்பதை அமித் ஷா தீர்மானிப்பவரா அல்லது தேர்தல் ஆணையத்தை நடத்தும் வேலையைச் செய்பவரா?
தேர்தல் ஆணையத்தை இயக்குபவராக அமித் ஷா இருக்க மாட்டார் என்று நம்புகிறேன். சுதந்திரமானதும், நேர்மையானதுமான தேர்தலை நாங்கள் விரும்புகிறோம்
அமித் ஷா தனது பிரசாரப் பேரணிகளில் கூட்டங்கள் வராததால் விரக்தியில் இருக்கிறார். அவர் கொல்கத்தாவில் உட்கார்ந்துகொண்டு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களைத் துன்புறுத்துவதற்கான சதிதிட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அவர்களுக்கு என்னதான் வேண்டும்? என்னைக் கொல்ல வேண்டுமா? என்னைக் கொல்வதன் மூலம் இந்தத் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்களா? அவர்கள் நினைப்பது தவறு.
"மோடி தனது பெயரில் விளையாட்டு மைதானத்தைக் கட்டுகிறார். அவர் தனது பெயரில் இனி சாலைகளை அமைப்பார். அதன்பின், இந்த நாட்டுக்கே அவர் தனது பெயரை சூட்டிக்கொள்வார்" என்றார் மம்தா பானர்ஜி.
இதனிடையே, பலராம்பூரில் பிரசாரம் மேற்கொண்ட உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், "நம் நாட்டில் மாற்றம் வந்துவிட்டது... மம்தா தீதி கூட கோயில்களுக்குச் செல்கிறார். இது மாற்றம் இல்லையா? இதுதான் புதிய இந்தியா" என்று பேசினார்.