‘66 வயது மம்தா பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்” -பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் சுவேந்து அதிகாரி ‘66 வயது மம்தா பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்று விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் இன்று 30 தொகுதிகளில் இரண்டாம் கட்டவாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதில், நந்திகிராம் தொகுதியும் ஒன்று. மம்தா பானா்ஜி தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவி வகித்து வந்த சுவேந்து அதிகாரி, அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விலகி, கடந்த டிசம்பர் மாதத்தில் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அவரின் சவாலை ஏற்று சுவேந்து அதிகாரியின் தொகுதியான நந்திகிராமில் போட்டியிடுகிறார் மம்தா பானர்ஜி.
இன்று, நந்திகிராம் தொகுதியில் வாக்களித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய சுவேந்து அதிகாரி, “66 வயது மம்தா பொறுமையை கடைப்பிடிக்கவேண்டும். பிரதமர் மோடியை இழிவான சொற்களால் விமர்சிக்கிறீர்கள். இது முதல்வர் பதவிக்கு அழகல்ல” என்று விமர்சித்துள்ளார்.