பரப்புரை வாகனம் ரெடி... தேர்தலுக்கு ஆயத்தமாகும் மக்கள் நீதி மய்யம்...!
2021 சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் இப்போதே கூட்டணி வியூகங்களை அமைக்கத் தொடங்கிவிட்டன. தமிழகத்தின் பிரதான கட்சியான ஆளும் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்துள்ளது. அதேபோல, எதிர்க்கட்சியான திமுக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்தான் முதல்வர் வேட்பாளர் என்பதில் உறுதியாக உள்ளது.

இதேபோல் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் உறுதி செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளது. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று 100 சட்டமன்றத் தொகுதிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, விருதுநகர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது தொகுதி வாரியாக மக்கள் நீதிமய்யத்தின் வளர்ச்சி குறித்து கமல்ஹாசன் மாவட்ட நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும் தேர்தல் பரப்புரைக்கு செல்ல வாகனமும் தயார் நிலையில் வைத்துள்ளார் கமல்ஹாசன். அந்த சிவப்பு நிற பரப்புரை வாகனம் பார்ப்பவர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.