தொண்டர்களின் உணர்வைத்தான் எதிரொலித்துள்ளேன்: மைத்ரேயன்
அதிமுகவில் மனங்கள் இணையவில்லை என நான் கூறியது எனது தனிப்பட்ட கருத்து அல்ல. அடிமட்டத் தொண்டர்களின் உணர்வைத்தான் நான் எதிரொலித்துள்ளேன் என மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணி இணைந்து மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?" இப்படி ஒரு பதிவை ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினரும், அதிமுக மூத்த தலைவருமான வி.மைத்ரேயன் நேற்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் வாத விவாதங்களை சூடாக்கியது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருந்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கட்சி விஷயங்களை மைத்ரேயன் பொதுத்தளத்தில் பேசியிருக்கக் கூடாது என கூறியிருந்தார். மேலும் தம்பிதுரை கூறும்போது, அது மைத்ரேயனின் தனிப்பட் கருத்து என கூறினார்.
இந்நிலையில் அடிமட்டத் தொண்டர்களின் உணர்வைத்தான் தான் தெரிவித்துள்ளதாக மைத்ரேயன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர், “மைத்ரேயனின் பதிவு அவரது தனிப்பட்ட கருத்து என்று தம்பிதுரை கூறியுள்ளார். இது எனது தனிப்பட்ட கருத்து அல்ல. பெரும்பாலான கழக அடிமட்டத் தொண்டர்களின் உணர்வைத் தான் நான் எதிரொலித்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.