”பாஜகவினர் இங்கு வாக்கு சேகரிக்கக் கூடாது” - மதுரையில் வேட்பாளரை திருப்பி அனுப்பிய மக்கள்!
மதுரையில் வாக்கு சேகரிக்கச் சென்ற பாஜக வேட்பாளர் மற்றும் கட்சியினரை பொதுமக்கள் விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாநகராட்சி 54 வது வார்டில் இஸ்லாமியர் அதிகம் வசிக்கின்றனர். இந்த வார்டில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் மெகருநிஷா இன்று காஜிமார் பெரிய பள்ளிவாசல் பகுதியில் தனது ஆதரவாளர்கள் ஐந்து பேருடன் வாக்கு சேகரிக்க வந்துள்ளார். அப்போது அப்பகுதியை சேர்ந்த சிலர் திடீரென அவர்களை வழிமறித்துள்ளனர்.
இதையடுத்து பாஜகவை சேர்ந்தவர்கள் இந்த பகுதியில் வாக்கு சேகரிக்க வரக்கூடாது என்றும், தொடர்ந்து மெகருநிஷா மற்றும் அவர்களது ஆதரவாளர்களை உடனடியாக திரும்பிச் செல்லுமாறு சுமார் 20க்கும் மேற்பட்டோர் வேட்பாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திடீர் நகர் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வேட்பாளர் மற்றும் பாஜக கட்சியினரை பாதுகாப்பாக அப்பகுதியில் இருந்து அழைத்துச் சென்றனர்.