“சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து” என சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமலஹாசனுக்கு முன்ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமலஹாசன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "அரவக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையிலோ, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலோ நான் பேசவில்லை. நாதுராம் கோட்சே குறித்து நான் பேசியது சர்ச்சைக்குரியது அல்ல. காந்தி படுகொலை வழக்கில் நாதுராம் கோட்சே, காந்தியை கொன்றது குறித்து விளக்கமளித்த போது, "நான் ஒரு இந்து.மகாத்மா காந்தியின் நடவடிக்கைகள் இந்துக்களின் நலனுக்கு எதிராகவும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருந்தது. அதோடு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் குறிப்பாக மின்டோ மார்லி நடவடிக்கைகளால் ஏற்பட்ட இந்து - முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கான வரலாற்றை முழுமையாக அறியாமல் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு வித்திட்டார்" என குறிப்பிட்டுள்ளார்.
நான் நாதுராம் கோட்சேவை பற்றி மட்டுமே பேசிய நிலையில் ஒட்டுமொத்த இந்துக்கள் குறித்து எவ்வித கருத்தையும் பதிவு செய்யவில்லை.என் மீது பதிவு செய்யப்பட்ட இரு பிரிவுகளின் கீழ் நான் எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை. இந்து முஸ்லிம்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் நான் எந்த கருத்தையும் பேசவில்லை. ஆகவே என் மீது FIR ல் குறிப்பிட்டுள்ள இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு தொடர்பான லலிதாகுமாரி வழக்கில், உச்ச நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல்களை காவல்துறையினர் பின்பற்றவில்லை.
அதோடு,என் மீது வழக்கு தொடர்ந்தவர் நிகழ்விடத்தில் இல்லாத நிலையில், கேட்டறிந்த தகவல் அடிப்படையில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கால் என் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.மாநில அமைச்சர் ஒருவர் எனது நாக்கை அறுக்க வேண்டும் என ஊடகங்களில் வெளிப்படையாக பேசியுள்ளார்.வரலாற்று ரீதியாக நான் பதிவு செய்த கருத்து அரசியல் ஆதாயம் தேடும் வகையிலும், நற்பெயருக்கும், பொது வாழ்விற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் ஒரு சிலரால் தவறுதலாக பகிரப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தவறுதலாக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில் இன்று நீதிபதி புகழேந்தி, கமலஹாசனுக்கு முன் ஜாமின், வழங்கி உத்தரவிட்டார்.பொதுவாக ஒருவருக்கு முன் ஜாமின் வழங்கும் போது, அவருக்கு வழங்கப்படும் நிபந்தனை கமலஹாசனுக்கு பொருந்தும். அதாவது 15 நாட்களுக்குள்ளாக கமலஹாசன் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரு நபர் ஜாமின் உத்தரவாதம் அளிக்க வேண்டும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் அவருக்கும் பொருந்தும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.