“அதிமுகவில் டிடிவி விரைவில் இணைவார்” - மதுரை ஆதினம் மீண்டும் சர்ச்சை
அதிமுகவில் டிடிவி தினகரனை மீண்டும் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்து வருகிறது என மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.
அமமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விரைவில் அதிமுகவில் இணைவார் என மதுரை ஆதீனம் தெரிவித்திருந்தார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பேசிய அவர், அதிமுகவை விட்டு பிரிந்துச் சென்றவர்கள் மீண்டும் இணைவார்கள் என்றும் சமரச பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது எனவும் தெரிவித்தார்.
மேலும், எங்களை பொருத்தவரை நாங்கள் என்ன சொல்லுகிறோம் என்றால் நிச்சயமாக டிடிவி தினகரன் அதிமுகவில் இணைவார் என்பது உறுதியான செய்தி எனக் குறிப்பிட்டார். இதற்கு டிடிவி தினகரன் மதுரை ஆதீனம் கூறியது ஆதாரமற்றது என மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதுரை ஆதினம், “அதிமுகவில் டிடிவி தினகரனை மீண்டும் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்து வருகிறது. யார் யார் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என்பதை வெளிப்படையாக கூற இயலாது. தேர்தலுக்குப் பின் அதிமுகவுடன் டிடிவி தினகரன் இணையும் காலம் வரும். பொறுத்திருந்து பாருங்கள்” எனத் தெரிவித்தார். அதிமுகவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என தினகரன் கூறிய நிலையில் மதுரை ஆதீனம் மீண்டும் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.