மதுரை: அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு
மதுரை சோழவந்தான் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மூதாட்டி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கச்சிராயிருப்பு பகுதியை சேர்ந்தவர் பேச்சியம்மாள். இவர் அப்பகுதியில் தென்னந்தோப்பில் உள்ள குடிசை வீட்டில் தங்கி தேங்காய் மட்டை சேகரித்து விற்பனை செய்து வருகிறார்.
இன்று அவரது வீட்டின் அருகே செல்லும் மின்கம்பி திடீரென அறுந்து விழுந்துள்ளது. அப்போது அவ்வழியே வந்த மூதாட்டி பேசியம்மாள் மின்கம்பியை மிதித்துள்ளார். இதில் மூதாட்டி பேச்சியம்மாள் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்து இறந்த பேச்சியம்மாளின் உடலை மீட்டனர். சம்பவம் அறிந்து அங்குவந்த காடுபட்டி போலீசார் இறந்த பேச்சியம்மாள் உடலை கைப்பற்றி சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர் விபத்து குறித்து காடுபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக மின்வயர் தாழ்வான நிலையில் இருந்து வந்ததாகவும் பலமுறை மின் வாரியத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.