“திருப்பரங்குன்றம் ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது” - உயர்நீதிமன்றம் தீர்ப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே போஸின் வெற்றி செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே போஸ் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தல் நடந்தபோது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம், ஏ.கே போஸ் வேட்புமனுவில் கைரேகை பெறப்பட்டு தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்டது.
ஆனால், சுயநினைவோடு இல்லாமல் இருந்த ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டதாகவும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரியும் திமுக சார்பில் போட்டியிட்ட மருத்துவர் சரவணன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே போஸ் இறந்துவிட்டதால் அங்கு இடைத்தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டது. இதனிடையே, திருப்பரங்குன்றத்தில் தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிராக தொடர்ந்த வழக்கை சரவணன் வாபஸ் பெற்றார்.
இந்நிலையில், ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று நீதிபதி வேல்முருகன் தீர்ப்பு அளித்துள்ளார். அதேபோல், ஏ.கே.போஸ் இறந்துவிட்டதால் இரண்டாவதாக வந்த தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்ற சரவணனின் கோரிக்கையையும் நீதிபதி நிராகரித்துள்ளார்.