நாம் தமிழர் கட்சி சின்னத்தை தெளிவாக பதிக்கக் கோரிய வழக்கு: தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
வாக்குப்பதிவு இயந்திரத்தில் நாம் தமிழர் கட்சி சின்னத்தை தெளிவாக பதிக்கக்கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் நாகை மாவட்டத்தை சேர்ந்த காளியம்மாள் தாக்கல் செய்த மனுவில், தங்கள் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கிய கரும்பு விவசாயி சின்னம், ஆணையம் வெளியிட்ட மாதிரி வாக்குசீட்டில் தெளிவாக இல்லை என்றும், இயந்திரத்திலும் தெளிவாக இல்லாததால் தங்கள் கட்சிக்கு வாக்களிக்க வரும் வயதானவர்கள், பார்வை குறைபாடு உள்ளவர்கள் வாக்களிக்க சிரமப்படுவார்கள் என குறிப்பிட்டு, தெளிவாக பொறிக்கும்படி ஏப்ரல் 3ஆம் தேதி தலைமை தேர்தல் அதிகாரிக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவிலை என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய விசாரணைக்கு வந்தபோது, வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்படும் வாக்குசீட்டு அனைத்து தொகுதிகளுக்கும் தயாரிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டு விட்டது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

