பொதுக் கூட்டம் நடத்த திமுகவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி
அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் 127 இடங்களில் மூன்று, நான்காம் தேதிகளில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்திருந்தது. இதற்காக காவல்துறையிடம் அனுமதி கேட்டு தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகள் மனு அளித்தனர். கரூரில் கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இதனையடுத்து தமிழகம் முழுவதும் கூட்டத்துக்கு அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில் திமுக கூட்டங்களுக்கு அனுமதி தரக்கூடாது என்று டி.ஜி.பி. வாய்மொழியாக உத்தரவிட்டு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி மகாதேவன் தலைமையில் நடைபெற்றது. அப்போது, “ஓரேடியாக அனுமதி மறுக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு தரப்பில் கூறியுள்ள காரணங்கள் ஏற்புடையதாக இல்லை” என நீதிபதி மகாதேவன் கூறினார். மேலும், மொத்தம் 127 இடங்களுக்கு திமுக சார்பில் அனுமதி கோரப்பட்ட நிலையில் 102 இடங்களில் போட்டம் நடத்த நீதிபதி அனுமதி அளித்தார். 20 இடங்களுக்கு மாற்று இடங்களை அறிவிக்குமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. அதேபோல், 5 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.