அதிமுகவை உருவாக்கியவன் நான்: மதுசூதனன்

அதிமுகவை உருவாக்கியவன் நான்: மதுசூதனன்
அதிமுகவை உருவாக்கியவன் நான்: மதுசூதனன்

அதிமுக கட்சி தன்னால் உருவாக்கப்பட்டது என்றும், அதனால் அக்கட்சியின் மீது என்றும் அதிருப்தி அடையமாட்டேன் எனவும் மதுசூதனன் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மதுசூதனன் தோல்வி அடைந்தார். அதேசமயம் சுயேட்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் மகத்தான வெற்றி பெற்றார். தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகின்ற போதிலும், இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியே தோல்வியடைந்தது அதிமுகவிற்குள்  சலசலப்பை ஏற்படுத்தியது. தோல்விக்கு பின் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி சார்பில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. அதன்பின் தொடர்ச்சியாக டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ளவர்கள், அதிமுகவில் வகித்து வந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு வந்தனர். ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வந்தனர்.

இதனிடையே நேற்று ஆர்.கே.நகர் தோல்விக்கு முக்கிய அமைச்சர்கள்தான் காரணம் எனவும், தோல்விக்கு காரணமான நிர்வாகிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் முதலமைச்சர் பழனிசாமிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த மதுசூதனன் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆர்.கே.நகரில் ஏற்பட்ட தோல்வி குறித்து இதுவரை ஆலோசிக்காதது ஏன் எனவும் மதுசூதனன் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாக தகவல் வெளியாகின. இரண்டு அணிகளாக பிரிந்து கிடந்த கட்சியை ஒன்றிணைத்து வலுவாக்க உதவியதுதான் தனது தவறா என்று அவர் கேள்வி எழுப்பியதாகவும் தகவல் வெளியாகின.

இந்நிலையில் புதிய தலைமுறைக்கு இன்று பிரத்யேக பேட்டியளித்த மதுசூதனன், அதிமுக தன்னால் உருவாக்கப்பட்டது என்றும், அதனால் அக்கட்சியின் மீது என்றும் அதிருப்தி அடையமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். அதிமுக உருவானபோது, கருணாநிதியால் தண்டிக்கப்பட்டு தான் சிறையில் இருந்ததாகவும் மதுசூதனன் கூறியுள்ளார். ஆர்.கே.நகர் தேர்தல் தோல்வி தொடர்பாக தான் கடிதம் எழுதியது கட்சியின் உள்விவகாரம் என தெரிவித்த மதுசூதனன், கடிதம் கொடுத்தது தொடர்பாக கட்சியின் தலைமையிடம் தான் கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதிமுகவுக்கு ஒருபோதும் களங்கம் ஏற்படுத்த விரும்ப மாட்டேன் எனவும் மதுசூதனன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com