சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து - ஸ்டாலின்
மதச்சார்பின்மை கொள்கையில் உறுதியான நம்பிக்கை உடைய மூத்த தலைவர் சோனியா காந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மறைந்த பிரதமர் ராஜூவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான சோனியா காந்தி இன்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி இந்திய அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் டெல்லி சென்று சோனியா காந்திக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார். இதற்காக இன்று அதிகாலை டெல்லி புறப்படும் போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்குமாறு சோனியாகாந்திக்கும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கும் அழைப்பு விடுக்க இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சோனியாகாந்தியோடு ஆலோசனை நடத்தப்படுமெனவும் அதைத்தொடர்ந்து நாளை டெல்லியில் எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டத்திலும் பங்கேற்க இருப்பதாகவும் கூறினார். அப்போது மற்ற மாநில அரசியல் தலைவர்களுக்கும் கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கவுள்ளதாக தெரிவித்தார். அந்த கூட்டத்தில் கர்நாடக முதல்வர் பங்கேற்றால், மேகதாது பிரச்னை குறித்து அவரிடமும் விவாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், மதச்சார்பின்மை கொள்கையில் உறுதியான நம்பிக்கை உடைய மூத்த தலைவர் சோனியா காந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் கழக ஆட்சியின் கோரிக்கையை ஏற்று தமிழ்மொழிக்கு ‘செம்மொழி’ அந்தஸ்து பெற்றுத்தர அடித்தளமிட்ட சோனியா பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் என ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.