ஒரு ட்ரெய்லர் தயாரிக்கவே 5 ஆண்டுகள் ஆகிறது என்றால் திட்டங்கள் தீட்ட எத்தனை ஆண்டுகள் ஆகும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
2019ஆம் ஆண்டின் மத்திய இடைக்கால பட்ஜெட்டை தற்காலிக நிதியமைச்சர் பியூஷ் கோயல் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்தார். இதுகுறித்து பிரதமர் மோடி பேசுகையில், விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வருமான உதவி திட்டம் 12 கோடி விவசாயிகளுக்கு பலனளிக்கும் எனவும் நடுத்தர மக்கள் இனி பலன்களை அனுபவிப்பார்கள், அவர்களுக்கு வாழ்த்துகள் எனவும் தெரிவித்தார்.
சமூகத்தின் கடைகோடி குடிமகனுக்கும் இத்திட்டம் சென்றடையும் எனவும் வளர்ச்சி திட்டங்களுக்கான ட்ரெய்லர்தான் இந்த பட்ஜெட் எனவும் மோடி தெரிவித்தார்.
இந்நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்ஜெட் என்ற பெயரில் நரேந்திர மோடி காமெடி செய்வதாக விமர்சித்துள்ளார். உரம், பூச்சி மருந்துக்கு வரியை உயர்த்திவிட்டு அதிலிருந்து விவசாயிகளுக்கு வழங்குவது மானியம் அல்ல எனவும் அது மோசடி எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு ட்ரெய்லர் தயாரிக்கவே 5 ஆண்டுகள் ஆகிறது என்றால் திட்டங்கள் தீட்ட எத்தனை ஆண்டுகள் ஆகும் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.