லக்னோவிடம் பணிந்தது டெல்லி கேப்பிடல்ஸ் - ஹாட்ரிக் வெற்றியை ருசித்த கேப்டன் ராகுல்

லக்னோவிடம் பணிந்தது டெல்லி கேப்பிடல்ஸ் - ஹாட்ரிக் வெற்றியை ருசித்த கேப்டன் ராகுல்
லக்னோவிடம் பணிந்தது டெல்லி கேப்பிடல்ஸ் - ஹாட்ரிக் வெற்றியை ருசித்த கேப்டன் ராகுல்

ஐபிஎல் தொடரில் இளம் அணியான லக்னோ ஜெயன்ட்ஸ் ஹாட்ரிக் வெற்றியை ஈட்டியுள்ளது. அந்த அணி நேற்றைய போட்டியில் டெல்லியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை சந்தித்தது. முதலில் பேட் பிடித்த டெல்லி அணியில் தொடக்கவீரர் டேவிட் வார்னர் தடுமாற்றத்துடன் ஆடியநிலையில் அவரை நான்கே ரன்னில் பிஷ்ணோய் அவுட்டாக்கினார். இதன் பின் ரோமன் பவலையும் 3 ரன்னில் பிஷ்ணோய் வெளியேற்றினார். எனினும் பிருத்வி ஷா சிறப்பாக ஆடி 34 பந்தில் 61 ரன் எடுத்தார்.

4ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ரிஷப் பந்த்தும் சர்ஃப்ராஸ் கானும் பந்துகளை விளாசித்தள்ளி ஸ்கோரை உயர்த்தினர். இறுதியில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்தது. பந்த் 39 ரன்னுடனும் கான் 36 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். லக்னோ தரப்பில் பிஷ்ணோய் 22 ரன் மட்டுமே கொடுத்து 2விக்கெட்டுகளை எடுத்தார். 151 ரன் என்ற இலக்குடன் ஆடத் தொடங்கிய லக்னோவுக்கு டிகாக் புயல் வேகத்தில் ஆடி 52 பந்துகளில் 80 ரன் குவித்தார்.

கேப்டன் கேஎல் ராகுல் 24 ரன்னில் ஆட்டமிழந்தார். இதற்கு பின் தங்கள் நேர்த்தியான பந்துவீச்சால் லக்னோவின் ரன் குவிப்பை டெல்லி வீரர்கள் கட்டுப்படுத்தினர். கடைசி 2 ஓவரில் லக்னோ வெற்றிக்கு 19 ரன் தேவைப்பட்ட நிலையில் ஆட்டம் மதில் மேல் பூனையாக மாறியது. இந்த ஓவரில் குருணால் பாண்டியா ஒரு சிக்சர் உட்பட 13 ரன் விளாசி வெற்றியை எளிதாக்கினார்.

கடைசி ஓவரில் 5 ரன்களை எளிதாக கடந்து லக்னோ வெற்றி பெற்றது. இத்தொடரில் லக்னோ அணி தொடர்ச்சியாக 3ஆவது ஆட்டத்தில் வென்றுள்ளது. புள்ளிகள் பட்டியலிலும் 2ஆவது இடத்திற்கு அந்த அணி முன்னேறியது. டெல்லி அணி 7ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com