தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்குகிறது. இம்முறை இளம் தலைமுறையினர் வாக்காளர்கள் அதிகளவில் இருப்பதால், தேர்தலில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பது முதலில் உறுதி செய்யப்படும். பின்னர் வாக்காளரின் அடையாள அட்டை சரியானதா என பரிசோதிக்கப்படும். அதைத் தொடர்ந்து, இரண்டாவது வாக்குச்சாவடி அலுவலர், வாக்காளர் இடதுகை ஆள்காட்டி விரலில் மை வைத்து, வாக்கு இருப்பதை உறுதி செய்ததற்கான சீட்டினை அளிப்பார். அத்துடன் 17ஏ எனப்படும் பதிவேட்டில் வாக்காளரின் கையெழுத்துப் பெறப்படும்.
வாக்கு இருப்பதை உறுதி செய்ததற்கான சீட்டையும், இடது கை ஆள்காட்டி விரலில் இடப்பட்ட மையையும் மூன்றாவது வாக்குச் சாவடி அலுவலரிடம் காண்பிக்க வேண்டும். அதன்பின்பு, வாக்காளர் வாக்குப் பதிவுக்கென அமைக்கப்பட்ட ரகசிய இடத்துக்கு அனுமதிக்கப்படுவார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மேல்பகுதியில் ரெடி' எனப்படும் பொத்தானில் பச்சை விளக்கு எரிவது உறுதி செய்யப்பட்ட பின்பு விரும்பும் வேட்பாளருக்கு வாக்கினைச் செலுத்தலாம்.
எந்தெந்த மாற்று ஆவணங்கள் ?
வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் வாக்களிக்கலாம். புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைக்குப் பதிலாக 11 வகையான மாற்று ஆவணங்களின் அசல் சான்றுகளில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம்.
கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), ஓட்டுநர் உரிமம், மத்திய-மாநில-பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் எனில் அதற்கான அடையாள அட்டை, வங்கி அல்லது தபால் நிலையங்கள் வழங்கியுள்ள புகைப்படத்துடன் கூடிய சேமிப்புக் கணக்குப் புத்தகம், நிரந்தர கணக்கு எண் அட்டை (பான்-அட்டை), தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆணையம் வழங்கும் ஸ்மார்ட் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அடையாள அட்டை, தொழிலாளர் நலத் துறையின் சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதியப் புத்தகம், எம்.பி., எம்.எல்.ஏ.,க்களின் அதிகாரப்பூர்வ அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்குகளைச் செலுத்தலாம்.