“உறுதியானது மகாராஷ்ட்ர பாஜக, சிவசேனா கூட்டணி ” - தேவேந்திர பட்னாவீஸ்

“உறுதியானது மகாராஷ்ட்ர பாஜக, சிவசேனா கூட்டணி ” - தேவேந்திர பட்னாவீஸ்
“உறுதியானது மகாராஷ்ட்ர பாஜக, சிவசேனா கூட்டணி ” - தேவேந்திர பட்னாவீஸ்

மக்களவை தேர்தலில் மகாராஷ்ட்ராவில் இணைந்து போட்டியிட பாஜக, சிவசேனாவும் முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் தேவேந்திர பட்னாவீஸ் தெரிவித்துள்ளார்.

தொகுதி பங்கீடு தொடர்பாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உடன் பாஜக தலைவர் அமித்ஷா இன்று மும்பையில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின் போது இரு கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டது. பாஜக 25 தொகுதிகளிலும், சிவசேனா 23 தொகுதிகளிலும் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, பாஜக, சிவசேனா கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். அப்போது, மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்களில் இரு கட்சிகளும் கூட்டாக போட்டியிடுவது என்று முடிவு செய்துள்ளதாக கூறினார். மேலும், “பாஜக, சிவசேனா இரு கட்சிகளும் ஒரே கொள்கை கொண்டவை. நாட்டின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளோம். மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும்” என்றார்.

முன்னதாக, கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும் பாஜக மீது தொடர்ச்சியாக சிவசேனா கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வந்தது. ஒரு கட்டத்தில் பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா நிச்சயம் வெளியேறிவிடும் என்று கூட பேசப்பட்டது. சமீபத்தில் கூட டெல்லியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மேற்கொண்ட தர்ணா போராட்டத்தில் சிவசேனா எம்.பி சஞ்சய் ராவுட் திடீரென கலந்து கொண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 

இதனையடுத்து, மக்களவை தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் பாஜக சிவசேனா இடையே பேச்சுவார்த்தைகள் தொடங்கின. கூட்டணி முடிவு எடுக்கப்பட்டாலும், கடந்த சில நாட்களாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நீடித்து வந்தது. பாஜக தலைவர் அமித்ஷா இன்று அதனை முடித்து வைத்துவிட்டார். பாஜக சிவசேனா கூட்டணியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com