உள்ளாட்சித் தேர்தல் நிலவரம் : 1 மணி வரை 42.47% வாக்குப்பதிவு
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 42.47 % வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே தமிழகத்தின் 27 மாவட்டங்களில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் என மொத்தம் 45ஆயிரத்து 336 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். வாக்குச்சீட்டுகளில் குழப்பம் உள்ளதாக சில இடங்களில் புகார்கள் எழுந்தன. புகார்கள் அனைத்தும் உடனுக்குடன் சரிசெய்யப்பட்டுள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்தில் முதல்வர் வாக்களித்தார். மனைவி ராதா, மகன் மிதுன்குமார், மருமகள் சங்கீதா ஆகியோருடன் சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு மதியம் 12.40 மணியளவில் முதலமைச்சர் வந்தார். அங்கு மக்களுடன் வரிசையில் நின்று தனது ஜனநாயக கடமையை அவர் நிறைவேற்றினார்.
இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 42.47 % வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.