நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்று கூறுவார்கள். இன்றைய அவசரமான யுகத்தில் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு நோய்கள் பலரையும் பாதிக்கத் தொடங்கியிருக்கிறது. மாறாக தவறான பழக்கங்கள், முறையற்ற உணவு , பற்றாக்குறையான தூக்கம் என பல்வேறு நடவடிக்கைகளால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். வயதானவர்கள், இளைஞர்கள் முதல் பள்ளி செல்லும் மாணவர்கள் வரை தொட்டதற்கெல்லாம் மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கும் ஆளாகி வருகின்றனர். யோகாவை முறையாக கற்றுக் கொண்டு தினமும் சரியான முறையில் பயிற்சி செய்தாலே நோய்களில் இருந்து நீங்கி, ஆரோக்கியமாக வாழலாம் என்பதை அனைவருக்கும் கற்றுத் தந்து வருகிறார் யோகா தெரபிஸ்ட் பத்மபிரியதர்ஷினி.
குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியோர் என அவரவர் உடல் அமைப்பிற்கும், வயதிற்கும், அவர்களது உடல் உழைப்பிற்கும் ஏற்ப ஆரோக்கியமான எளிய ஆசனங்களை, புதிதாக வடிவமைத்திருத்து சொல்லி தருகிறார் யோகா ஆசிரியை பத்மபிரியதர்ஷினி. சென்னையை சேர்ந்த யோகா தெரபிஸ்ட்டான
யோகதத்வா சென்டரின் நிறுவனரும் பயிற்றுனருமான பத்ம பிரியதர்ஷினி, அடிப்படையில் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர். ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தவர். அதன் பின்னர் கடந்த 12 ஆண்டுகளாக யோகா மற்றும் அக்குபஞ்சர் துறையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
ஐ.டி. துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது ஒரு விபத்தில் சிக்கிய பத்மபிரியதர்ஷினிக்கு தொடர்ந்து கழுத்து வலி பெரும் தொந்தரவாக இருந்து வந்துள்ளது பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக வலியை குணப்படுத்த முடியவில்லை. வலியில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக தான் கற்று வைத்திருந்த யோகா கலையைக் கையில் எடுத்தார் பத்ம பிரியதர்ஷினி. என்ன ஒரு ஆச்சர்யம், யோகா செய்ய ஆரம்பித்த சில வாரங்களிலேயே கழுத்து வலி காணாமல் போனது.
தான் பெற்ற இந்த சுகத்தை வையமும் பெற வேண்டும் என முடிவெடுத்தார். யோகா மற்றும் அக்குபஞ்சர் குறித்து தீவிரமாக படிக்க ஆரம்பித்த அவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக யோகா மற்றும் அக்குபஞ்சர் துறையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, அதன் மூலம் யோகாவை மக்களிடம் எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பதற்கான சுவாரஸ்யமான வழியைக் கண்டுபிடித்துள்ளார். யோகாவோடு அக்குபங்சர் மருத்துவ முறைகளையும் கற்று தேர்ந்துள்ளார்.
கார்ப்ரேட் நிறுவனங்களில் ஆயிரம் ஆயிரமாக சம்பளத்தை மட்டுமல்ல, நீண்ட நேரம் அமர்ந்து கொண்டே வேலை செய்வதால் கழுத்து, முதுகு மற்றும் மூட்டு சம்பந்தமான வலிகளும் ஊழியர்களுக்கு கிடைக்கிறது. இதைப்போக்க எளிமையான யோகா பயிற்சியைக் கற்றுத் தருகிறார். குறிப்பாக தற்போதைய வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படக்கூடிய சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த அழுத்தம் போன்ற நோய்களில் இருந்து விடுபட தினமும் 15 நிமிடங்கள் மட்டுமே செய்யக்கூடிய யோகா பயிற்சிகளை அளித்து வருகிறார்.
வெறும் யோகா பயிற்சி மட்டுமின்றி, உணவுக்கட்டுப்பாடு , ஆரோக்கியமான சத்தான எளிதான உணவுகள் தொடர்பாகவும் கற்பிக்கிறோம். என்னென்ன மாதிரியான உணவுகளை எந்தெந்த நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் என்னென்ன மாதிரியான சத்துக்கள் கிடைக்கும் என்றும் தன்னிடம் யோகா பயில வருவோருக்கு முறையாக கற்றுக்கொடுக்கிறார்.
ஏனெனில் நாம் சாப்பிடும் உணவில் உள்ள சத்துக்கள் தான் உடல் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. அதனோடு யோகாவும் இணைக்கின்ற போது ஏராளமான பயன்கள் நமக்கு கிடைக்கும் என்பதே பத்ம பிரியதர்ஷினி ஆணித்தரமாக நம்புகிறார். தற்போது சின்னச்சிறு குழந்தைகள் முதற்கொண்டு இளம் வயதினர் வரை பலரையும் பாடாய் படுத்தும் சர்க்கரை நோய்க்கு எளிமையான தீர்வுகள் யோகாவில் உள்ளதாக கூறும் அவர், சர்க்கரை நோய்க்கான மருந்துகளை எடுப்பதை குறைக்கவும், அதனால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளை தடுக்கவும் யோகா தெரபி மூலம் பயிற்சி அளிக்கிறார்.
இன்றைய நவீன யுகத்தில் இரவு நேரங்களில் தூக்கமின்றி தவிக்கிறார்கள். இதற்கும் முறையான பயிற்சி மூலமாக தீர்வு காண இயலும்.
முக்கியமாக முறையான யோகாசனம் செய்வதன் மூலமாக மருந்தில்லா வாழ்க்கை வாழலாம். பல்வேறு நோய்களை கட்டுக்குள் வைக்கும் திறன் யோகாவிற்கு இருக்கிறது. யோகா, தியானம் போன்றவை உடல்நலனோடு மன நலனையும் பாதுகாக்கும். குறிப்பாக சர்க்கரை, மலச்சிக்கல், ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராடவும் யோகா உதவுகிறது.
தற்போது பல கார்பரேட் ஊழியர்கள், தொழில் துறையில் பணியாற்றுபவர்கள், குடும்ப தலைவிகள் , வேலைக்கு போகும் பெண்கள், கல்லூரி மாணவிகள் என பலரும் ஆர்வமாக யோகா கற்க வருகிறார்கள். பொதுவாக உடலை நெகிழ வைப்பதற்காக மட்டுமேயல்ல, உண்மையில் யோகாசனங்கள் நமக்கு பலவிதமான நன்மைகளை அள்ளி தருகின்றன. ஒருவர் தொடர்ந்து யோகா செய்வது வந்தால் வாழ்நாள் முழுவதும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க முடியும். யோகாவில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்கிற எண்ணங்களுடன் தனது ஆராய்ச்சியை தொடர்ந்து வரும் பத்ம பிரியதர்ஷினி, எதிர்கால தலைமுறைக்கு யோகாவின் நன்மைகள் குறித்தும், சரிவிகித உணவு முறைகள் குறித்தும் கற்பிக்க வேண்டும் என்பதிலும் முழு ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார்.