பீகார் தேர்தலில் இண்டியா கூட்டணி பின்னடைவை சந்திப்பதற்கு இதுவா காரணம்? | Bihar Election Result
கருத்துக் கணிப்பு கூறியபடி பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியே முன்னிலை பெற்று வருகிறது. இந்த அரசியல் முடிவுகள் பல்வேறு செய்திகளை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. குறிப்பாக இண்டியா கூட்டணியின் பின்னடைவிற்கான முக்கிய காரணங்களையும் எடுத்துரைக்கிறது.
பீகார் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணிக்கும், இண்டியா கூட்டணிக்கும் இடையே நேரடியாக போட்டி நிலவியது. இந்த தேர்தலில் வேலைவாய்ப்பின்மை மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது. பீகாரில் இருந்து புலம் பெயர்ந்து செல்லும் மக்களுக்கு அம்மாநிலத்திலேயே வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்ற வாக்குகுறுதிகளை அரசியல் கட்சியினரிடம் மக்கள் அதிகம் எதிர்பார்த்தனர்.
அதேவேளையில், பெண்களுக்கான வாக்குகள் இந்தத் தேர்தலில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அவர்களுக்கான நலத்திட்டங்களை முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவிப்பதில் தவறவில்லை. முதல்வர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம் என்கிற பெயரில் பெண்கள் தொழில் தொடங்க தலா 10,000 வழங்கப்படும் என அறிவித்து அவர்களின் வங்கிக்கணக்கிலும் அப்பணம் செலுத்தியது நிதிஷ்குமார் அரசு. இதற்கு போட்டியாக பெண்களுக்கு ஆண்டுக்கு 30,000 ரூபாய் வழங்கப்படும் என இண்டியா கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் அறிவித்தார். அப்படியிருந்தும், பிஹார் பெண்கள் நிதிஷ்குமார் மீதே நம்பிக்கை வைத்திருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது.
காங்கிரஸைப் பொறுத்தவரை, தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளையே அக்கட்சியின் முன்னனி தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் பாஜகவினர் வாக்குத்திருட்டில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்சாரம் பீகார் மக்களிடையே எடுபடவில்லை என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
அதேவேளையில், புலம் பெயர் பீகார் தொழிலாளர்களை, இண்டியா கூட்டணி ஆளும் மாநிலங்களில் காங்கிரஸும், திமுகவும் அவதிக்கப்படுவதாக பாஜக தரப்பில் முன்வைக்கப்பட்ட பரப்புரைகள் சர்ச்சையாகின. அதேவேளையில், ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசாதுதீன் ஓவைசி, இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்களை நோக்கி முன்வைத்த குற்றச்சாட்டுகள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. சிறுபான்மையினர்களுக்கு அதிகாரம் அளிக்காமல் அவர்களை வெறும் வாக்குக்காகவே இண்டியா கூட்டணிக் கட்சியினர் பயன்படுத்துவதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தது ராகுல்காந்திக்கும், தேஜஸ் யாதவிற்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
ராகுல்காந்தி மீது கொண்டிருந்த அதீத நம்பிக்கையால், காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கியதும் இண்டியா கூட்டணியின் பின்னடைவிற்கு ஒரு காரணமாகவே பார்க்கப்படுகிறது. 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் மிகக்குறைந்த இடங்களிலேயே முன்னிலை பெற்றிருக்கிறது. அதேபோல், தேஜஸ் யாதவ் மீதான சாதிய அடையாளும் இண்டியா கூட்டணிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

