மொழிவாரி மாநிலப்பிரிப்பு தினம்: அரசியல் தலைவர்கள் கருத்து
மொழிவாரி மாநிலம் பிரிப்பு தினம் குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அனைத்து சமஸ்தானங்களும், குறிப்பிட்ட நிலப்பரப்பின் அடிப்படையில் ஆட்சி செய்யப்பட்டு வந்தன. தற்போது உள்ளதைப் போல் மொழிவாரி மாநிலங்கள் அப்போது இல்லை. உதாரணமாக அப்போது இருந்த மெட்ராஸ் ஸ்டேட் எனப்பட்ட சென்னை மாகாணம் இன்றைய தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகத்தின் பல பகுதிகள் இணைந்து இருந்தது, மெட்ராஸ் ஸ்டேட்டில் தமிழ் உள்ளிட்ட நான்கு மொழி பேசுபவர்களும் இருந்தனர்.
அதன்பிறகு மொழி வாரியாக மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும், போராட்டங்களும் தேசிய அளவில் எழத்தொடங்கின.
இந்த போராட்டங்களின் விளைவாக 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு, மொழி வாரியாக இந்தியா 14 மாநிலங்களாகவும் 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. இவ்வாறு மொழிவாரியாக பிரிக்கப்பட்ட தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து அரசியல் தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி ஆனந்தன் கூறுகையில், “மொழிவாரி மாநிலப்பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்ப்பர்க்கப்பட்ட நிலையில், மொழிவாரி மாநிலப்பிரிப்பே புதிய பிரச்னைகள் தோன்ற காரணமாய் அமைந்தது. தமிழ் பேசும் மக்கள் நிறைந்த பெரு நிலப்பரப்புகள் அண்டை மாநிலங்களுக்கு போயின.” என்று தெரிவித்தார்.
திமுக செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், “ 'மதராஸ் மனதே' என்று சென்னையை நோக்கி ஆந்திரர்கள் முன்வைத்த முழக்கம் அன்று முழுமை பெற்றிருந்தால் தமிழகம் தலையில்லா நகரமாக இருந்திருக்கும். வாடிவாசல் திறக்கப்படாமல் வீட்டு வாசல் செல்லமாட்டோம் என்று சமீபத்தில் முன் வைக்கப்பட்ட முழக்கம் மெரீனா அலைகளை அதிரச் செய்திருக்காது.” என்றார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், “ மொழிவாரி மாநிலங்கள் உருவான போது அந்தந்த மாநில அரசியல் தலைவர்கள் தங்கள் மாநிலத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த போது, தமிழகத்தில் இருந்த அரசியல் தலைவர்கள் ஒருமித்த குரல் தராததே தமிழர் பகுதிகள் பிரிந்து சென்றதற்கு காரணம். இந்த முரண்பாடு களையப்பட வேண்டும் என்ற மா.பொ.சியின் கருத்தே தற்போதும் எதிரொலிக்கிறது” என்றார்.