மக்கள் புரட்சி வெடிக்கும்: தமிழக அரசிற்கு தலைவர்கள் எச்சரிக்கை..!

மக்கள் புரட்சி வெடிக்கும்: தமிழக அரசிற்கு தலைவர்கள் எச்சரிக்கை..!
மக்கள் புரட்சி வெடிக்கும்: தமிழக அரசிற்கு தலைவர்கள் எச்சரிக்கை..!

தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வுக்கு தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

தமிழக அரசு பேருந்துகளின் கட்டணம் சராசரியாக 60 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு கடந்த 20-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிறிய அளவில் பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டது.

இந்நிலையில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சென்னை கொளத்தூரில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்‌தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கைது செய்ய காவலர்கள் வந்த போது, வேனில் ஏறமறுத்த மு.க.ஸ்டாலின், கைது செய்யப்படுவோர் தங்கவைக்கப்படும் சமூக நல கூடத்திற்கு நடந்தே சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “அதிமுக அரசு உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை முழுமையாக குறைக்க வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லையெனில் போராட்டம் தொடரும்" என எச்சரிக்கை விடுத்தார்.

சைதாப்பேட்டையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “ மக்கள் கிளர்ச்சி கொந்தளிக்கிறது. பேருந்து கட்டண உயர்வை முழுமையாக திரும்பப் பெறாவிட்டால், மக்கள் கிளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து பெருகி மக்கள் புரட்சியாக வெடிக்கும். அதனை தடுப்பதும், அல்லது மக்களின் கோபத்திற்கு மீண்டும் ஆளாகுவது அரசின் கைகளில்தான் உள்ளது” என்றார்.

போராட்டத்தில் ஈடுபட்ட  திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ தற்போது  பைசா கணக்கில் கட்டணக் குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கை ஏழை, எளிய மக்களை ஏய்க்கிற நடவடிக்கை. இதனால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை” என்றார்.

இதேபோல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “பேருந்து கட்டண உயர்வால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிப்பிற்குள்ளாகியுள்ளார்கள். இதனால் பேருந்துகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com