தமிழக சட்டப்பேரவையில் படம் வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் விவரம்..!
மறைந்த முதல்வர் ஜெயலலிதா படம் நாளை சட்டப்பேரவையில் திறக்கப்படும் நிலையில், அங்கு ஏற்கனவே படம் வைக்கப்பட்டுள்ள மற்ற தலைவர்களின் விவரங்கள்..
சட்டப்பேரவை அரங்கில் திருவள்ளுவர், மகாத்மா காந்தி, ராஜாஜி, காயிதேமில்லத், அம்பேத்கர், முத்துராமலிங்கத் தேவர், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகிய பத்து பேரின் படங்கள் தற்போது உள்ளன. மகாத்மா காந்தி படத்தை 1948-ஆம் ஆண்டு அப்போதைய கவர்னர் ஜெனரல் ராஜாஜி திறந்து வைத்தார். ராஜாஜி படம் அவர் உயிருடன் இருக்கும்போதே பேரவையில் வைக்கப்பட்டதுடன், அதனை 1948-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் நேரு திறந்து வைத்தார்.
திருவள்ளுவர் படம் கடந்த 1964-ஆம் ஆண்டு பேரவை அரங்கில் வைக்கப்பட்ட நிலையில், அது அப்போதைய துணை குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேனால் திறந்து வைக்கப்பட்டது. மறைந்த முதல்வர் அண்ணா படத்தை பேரவை அரங்கில் 1969-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த இந்திராகாந்தி திறந்து வைத்தார்.
இதேபோல், காமராஜர் படம் 1977ஆம் ஆண்டு குடியரசுத் தலைவராக இருந்த நீலம் சஞ்சீவி ரெட்டியால் திறக்கப்பட்டது. பெரியார், அம்பேத்கர், முத்துராமலிங்கத்தேவர், காயிதேமில்லத் ஆகிய நால்வரின் படங்களும் 1980-ஆம் ஆண்டு பேரவையில் வைக்கப்பட்டதுடன், அந்தப் படங்களை அப்போதைய கேரள ஆளுநர் ஜோதி வெங்கடாச்சலம் திறந்து வைத்தார். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் படம் 1992-ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது.