ஒரே நேரத்தில் தேர்தல்; அரசியல் கட்சிகளிடம் இன்று கருத்துக் கேட்பு
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து முக்கிய அரசியல் கட்சிகளுடன் கருத்துக் கேட்பு கூட்டம் இன்று தொடங்குகிறது.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு அரசியல் கட்சிகளிடம் ஆதரவும், எதிர்ப்பும் பரவலாக நிலையில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து முக்கிய அரசியல் கட்சிகளுடன் கருத்துக் கேட்பு கூட்டம் இன்று தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்தக் கூட்டத்தில் அதிமுக சார்பில் மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். மக்களவை, மாநில சட்டப் பேரவைளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு மத்திய பாஜக அரசு அதிக ஆர்வம் காட்டி வருகிறது.
இதைத் தொடர்ந்து 2 கட்டங்களாக தேர்தல் நடத்துவது குறித்து மத்திய சட்ட ஆணையமும் பரிந்துரை செய்திருந்தது. அதன் தொடர்ச்சியாக ஏழு தேசிய கட்சிகள், 59 மாநில கட்சிகளுக்கு சட்ட ஆணையம் கடிதம் அனுப்பி ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து கருத்து தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தது. இந்தச் சூழ்நிலையில் இந்த விவகாரம் தொடர்பான கருத்துக் கேட்பு ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. முதல் நாள் கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவிக்கவுள்ளனர்.