“இதுக்குதான் பேச்சுலர்ஸ்-க்கு...” - பட்டதாரிக்கு வீட்டை வாடகைக்கு விட்ட ஹவுஸ் ஓனரின் புலம்பல்!

இந்திய சமூகத்தில் பெரும்பாலும் பேச்சுலர்களுக்கு வீட்டை வாடகைக்கு கொடுக்க வேண்டும் என்றால் உரிமையாளர்களுக்கு வேப்பங்காயாவே கசக்கும்.
Bachelor House
Bachelor House@ravihanda, twitter

இந்தியாவின் பெங்களூரு, சென்னை, புனே, மும்பை போன்ற மெட்ரோ நகரங்களில் வாடகைக்கு வீடு தேடுவதும் கிடைப்பதும் பெரிய குதிரைக் கொம்பான வேலையாகவே பார்க்கப்படுகிறது.

மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளை கூட கஷ்டப்பட்டு படித்து பாஸ் ஆனாலும், வீடு தேடும் போது உரிமையாளர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்க ‘அப்பப்பா...’ என்ற பெருமூச்சு விட்டுவிடுவார்கள். அப்படி ஆகாதவர்கள், நம் ஊரில் நிச்சயம் அரிதுதான்!

அதிலும் பேச்சுலர்கள் அல்லது ஸ்பின்ஸ்டராக (திருமணமாகாத ஆண்கள், பெண்கள்) இருந்தால் வீட்டு ஓனர்களின் ஒரு பக்க கேள்விக்கு இரு பக்கத்தில் பதிலளிக்க கூடுதல் பேப்பர் கூட கேட்கலாம் என்றளவுக்கே தோன்ற வைக்கும்.

‘திருமணமாகாத இளையோர், வீட்டில் முறையான பராமரிப்பை மேற்கொள்ள மாட்டார்கள்’ என்ற எண்ணத்தின் அடிப்படையில்தான் அவர்களுக்கு வீட்டை வாடகைக்கு கொடுக்க வேண்டும் என்றால் இந்திய சமூகத்தில் உரிமையாளர்களுக்கு வேப்பங்காயாக இருக்கிறது.

இதிலேயே திருமணமானவர்கள் - ஆகாதவர்கள் வேறுபாடு போல படித்தவர்கள் - படிக்காவர்கள் வேறுபாடும் உரிமையாளர்கள் மத்தியில் இருக்கிறது. உதாரணத்துக்கு ‘வாடகைக்கு குடியேறுவோர் IIT, IIM, IBM போன்ற உயரிய கல்வி நிறுவனங்களில் பயின்றவர்களாக இருக்க வேண்டும்’ என பெங்களூரு ஹவுஸ் ஓனர்கள் கெடுபிடி காட்டுவதை சொல்லலாம்! இவர்கள் தங்களின் இதுபோன்ற செயல்களுக்கு ‘படித்த இளைஞர்கள் எந்த குற்றத்திலும் ஈடுபட மாட்டார்கள், ஒழுக்கமாக இருப்பார்கள்’ என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள்.

ஆனால் இந்த காரணங்களும், கற்பிதங்களும் எந்த வகையிலும் தினசரி வாழ்வில் எள்ளளவும் எடுபட்டுவிடாது என்பதை நிரூபிக்கும் விதமாக அதே பெங்களூருவில் உள்ள ஒரு வீட்டில் நடந்த சம்பவம் குறித்த ஃபோட்டோக்கள் தெள்ளத்தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றன.

WebTeam

அதன்படி, பெங்களூருவைச் சேர்ந்த வீட்டு உரிமையாளர் ஒருவர் மாரத்தள்ளில் பகுதியில் உள்ள தனது 2BHK ஃப்ளாட்டை ‘பட்டம் படித்த’ ‘பெரிய எம்.என்.சி நிறுவனத்தில் பணிபுரியும்’ ஒரு பேச்சுலருக்கு வாடகைக்காக விட்டிருந்தார். முதல் 3, 4 மாதங்களுக்கு முறையாக வாடகையை கட்டிவந்த அவர் திடீரென மாயமாகி போனதோடு, வீட்டை தான் காலி செய்வதாகவும், உடனடியாக கொடுத்த முன்பணத்தை திருப்பி தருமாறும் கேட்டிருக்கிறார்கள்.

இதனையடுத்து சந்தேகமடைந்த வீட்டு உரிமையாளர் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று பார்த்த போது, அங்கு வீடு முழுக்க காலி மது பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டும், ஜன்னல்கள் திறந்தே கிடந்ததால் புறாக்கள் உள்ளே வந்து வீட்டை படு நாசம் செய்யப்பட்டும் கிடந்ததை கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்.

இந்த நிகழ்வை ரெடிட் தளத்தில் பதிவிட்ட அந்த வீட்டு ஓனர், “வீட்டை நாசம் செய்துவைத்து விட்டுச் சென்றதால் முன் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. ஆனால் அந்த இளைஞர் தனது சொந்த ஊருக்கு தப்பிச் சென்றிருக்கிறார். இருப்பினும் அவரது தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்கள் என்னிடம் உள்ளது. போலீசிடமும் புகார் கொடுத்திருக்கிறேன்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த பதிவு மற்றும் ஃபோட்டோக்களை ரெடிட் தளத்தில் கண்ட நெட்டிசன்கள், “யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளை வைத்து எல்லோரும் இப்படிதான் இருப்பார்கள் என்ற பொதுப்புத்திக்கு வருவது நல்லதல்ல” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com