நிதிநிறுவனம் நடத்தி 1,00,00,000ரூபாய் வரை மோசடி ! சிக்கிய ஆசாமி
ஈரோடு மாவட்டம் பவானி அருகே நிதிநிறுவனம் நடத்தி 1 கோடி ரூபாய் வரை மோசடி செய்து தலைமறைவாக இருந்த நபரை பாதிக்கப்பட்டவர்களே தேடிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பவானியில் சன் மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் கடன் வழங்கும் நிறுவனம் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் கடன் வேண்டுமென்றால் 5 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரையிலும், குழுவாக கடன் வேண்டுமென்றால் தலா 1251 ரூபாய் வரை டெபாசிட் செய்தால் ஒரு லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என அறிவித்தனர்.
இதனையடுத்து பவானி, கவுந்தப்பாடி போன்ற பகுதியைச் சேர்ந்த 1300 க்கும் மேற்பட்டோர் ஒரு கோடி ரூபாய் வரை கடன் வேண்டுமென சன் மைக்ரோ பைனாஸ்சில் டெபாசிட் செய்தனர். ஒருகோடி ரூபாய் வரை முதலீடாக பெற்றவர்கள் அந்த நிறுவனத்தை முடிவிட்டு தலைமறைவாகினர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தனர்.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பைனான்ஸ் நிறுவன உரிமையாளர்களை தேடி வந்தனர். இந்நிலையில் அந்த நிறுவனத்தில் வேலை செய்த ஊழியர்களும் பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்ந்து தேடி வந்தனர். இதைத் தொடர்ந்து திருச்சி அருகே உள்ள தனியார் விடுதியில் சன் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரும், அதே நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்த வேதகிரி என்பவர் தங்கி இருப்பது தெரியவந்தது.
உடனே ஊழியர்கள் திருச்சி சென்று வேதகிரி என்பவரை பிடித்து வந்து ஈரோடு குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். வேதகிரியிடம் நடைபெற்ற விசாரணையில் தஞ்சாவூரைச் சேர்ந்த சுரேஷ் ,விழுப்புரத்தைச் சேர்ந்த இளந்தளிருடன் சேர்ந்து 1300 பேரிடம் சுமார் 40லட்சம் வரை மோசடி செய்திருப்பதாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து தலைமறைவாக உள்ள இரண்டு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.