ரூ.10, ரூ.20 நோட்டுகள்; ரூ.5, ரூ.2 நாணயங்கள்... - எல்.முருகன் செலுத்திய வைப்புத்தொகை!
திருப்பூர் மாவட்டம் - தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில், பா.ஜ.க சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். மக்களிடம் இருந்து திரட்டி, வைப்புத்தொகை செலுத்தப்பட்டதாக பா.ஜ.க தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தாராபுரம் சார் ஆட்சியரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தபோது, அதிமுக மடத்துக்குளம் சட்டப்பேரவை வேட்பாளர் மகேந்திரன், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக, தாராபுரம் பேருந்து நிலையம் அருகே இருக்க கூடிய பா.ஜ.கவினர், பணிமனை முதல் சார் ஆட்சியர் அலுவலகம் வரை திறந்த வேனில் ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலத்தில் சுமார் 1000 பேர் கலந்துகொண்டனர்.
வேட்புமனுவை தாக்கல் செய்த பிறகு, அதற்கான வைப்புத் தொகை ரூ.5,000 செலுத்தப்பட்டது. அந்தத் தொகையில், ரூ.4,000 அளவுக்கு 10 மற்றும் 20 ருபாய் நோட்டுகளும், ரூ.1000-க்கு ரூ.5 மற்றும் ரூ.2 நாணயங்களும் கொடுக்கப்பட்டன. மக்களிடம் இருந்து தொகையைப் பெற்று வேட்புமனு வைப்புத்தொகை செலுத்தப்பட்டதாக பா.ஜ.க தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், "எங்களுடைய வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. வெற்றி வித்தியாச தேவைக்காகத்தான் வேலை செய்து வருகிறோம். தாராபுரத்தின் வளர்ச்சி மற்றும் தாராபுரத்தின் மேம்பாடு ஆகியவை தொடர்பாகத்தான் எங்களது செயல்பாடுகள் இருக்கும்" என்றார்.