’பிப்ரவரி மாதமே காங்கிரஸில் இருந்து விலகும்முடிவை எடுத்துவிட்டேன்’ - குஷ்பு பேட்டி..!

’பிப்ரவரி மாதமே காங்கிரஸில் இருந்து விலகும்முடிவை எடுத்துவிட்டேன்’ - குஷ்பு பேட்டி..!
’பிப்ரவரி மாதமே காங்கிரஸில் இருந்து விலகும்முடிவை எடுத்துவிட்டேன்’ - குஷ்பு பேட்டி..!

காங்கி‌ரஸ்‌ கட்சியின்‌ தேசி‌‌‌ய செய்தித் தொடர்பாளர் குஷ்பு, பா‌ரதி‌ய ஜனதா கட்சியில் நேற்று இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாட்டிற்கு எது நல்லது என்று போகப்போக புரிந்தது. அதனால்தான் பாஜகவில் இணைந்துள்ளேன். ஆளுங்கட்சியை விமர்சிப்பதுதான் எதிர்க்கட்சியின் விதிமுறை. அதைத்தான் நான் செய்து கொண்டிருந்தேன் என தெரிவித்தார். இந்நிலையில் தன்னுடைய அரசியல் நகர்வு குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு குஷ்பு பேட்டியளித்துள்ளார்.

நீங்கள் ஏன் காங்கிரஸில் இருந்து விலகினீர்கள்?

கட்சி செயல்படும் விதத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. காங்கிரஸ் கட்சி இப்போது மாறிவிட்டது. அங்குள்ளவர்கள் மாறிவிட்டார்கள். அந்த கட்சியின் கொள்கையும் மாறிவிட்டது.

நீங்கள் தாமரை இலை தண்ணீர் போலத்தான் இருந்ததாகவும், உங்களை நடிகையாகவே பார்த்தார்கள், தலைவராக பார்க்கவில்லை என காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியுள்ளார். அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

இது தான் தவறான கருத்து. நான் வெறும் நடிகையாக இருக்கலாம். ஆனால் அழகிரி தெரியாத முகம். என்னால் கூட்டத்தை ஈர்க்க முடியும். அவரால் முடியாது. திறமையான பெண்ணுக்கு எதிரான அவர்களின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும்.

எப்போது முதல் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினீர்கள்? இதுவரை பிரதமர் மோடியை சந்தித்து இருக்கீர்களா?

இல்லை. நான் மோடியை சந்திக்கவில்லை. பிப்ரவரி மாதமே காங்கிரஸில் இருந்து விலகும்முடிவை எடுத்துவிட்டேன். ஒரு பிரச்னைக்கு செய்தியாளர்களை சந்திக்க வேண்டுமென கட்சி என்னிடம் கூறியது. ஆனால் சென்னையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்த எனக்கு அனுமதி தரவில்லை.

கட்சியில் மட்டுமே மாற்றம், கொள்கையில் இல்லை எனக் கூறி இருக்கிறீர்கள். உங்கள் கொள்கை என்ன?

என்னுடைய கொள்கை மக்களுக்கு சேவை செய்வதும், நாட்டுக்காக பணியாற்றுவதுமே. நான் சந்தர்ப்பவாதி என்று சொல்வார்கள். ஆனால் நான் கட்சியின் பதவிக்காக என்றுமே பேரம் பேசியதில்லை.

பாஜக மதச்சார்பின்மையாக இருக்கிறதா? அது தொடர்பான உங்கள் பார்வை மாறுமா?


மதச்சார்பின்மை தொடர்பான என்னுடைய பார்வை மாறாது. கட்சியுடன் ஏற்பட்ட சில புரிதலால்தான் நான் பாஜகவில் சேர்ந்திருக்கிறேன். இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பார்கள். அப்படி என்றால் அவர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று அர்த்தம் இல்லை. அதேபோலத்தான் பாஜகவும்.

பாஜகவில் ஊழல் இல்லை எனக்கூறி இருக்கிறீர்கள். ஆனால் பாஜக பற்றியும், மோடி பற்றியும் பல விமர்சனங்களை முன் வைத்துள்ளீர்களே?

ஆமாம். நான் அதனை மறுக்கவில்லை. நான் பல ட்வீட்களை பதிவிட்டுள்ளேன். அதெல்லாம் என் அட்மின் பதிவிட்டது என நான் கூறப்போவதும் இல்லை. நான் காங்கிரசில் இருந்த போதுதான் முத்தலாக் தொடர்பான சட்டத்திற்கு பாராட்டு தெரிவித்தேன். மோடியையும் பாராட்டினேன். ஏதோ எதிர்க்க வேண்டுமென்பதற்காக அனைத்தையும் எதிர்க்கவில்லை. எதிர்க்கட்சி என்பது அனைத்தையும் எதிப்பதுமட்டுமல்ல. அதற்கான தீர்வையும் காண்பதுதான்.

சமீபத்தில் தமிழக பாஜக தலைமை பெரியாரை புகழ்ந்தார். அதற்கு கட்சிக்குள் சில எதிர்ப்பு வந்ததாக தெரிகிறது. நீங்கள் தொடர்ந்து பெரியாருக்கு ஆதரவு தெரிவிப்பீர்களா?


பெண் சுதந்திரத்துக்கும், அவர்களின் உரிமைக்காகவும் போராடியவர் பெரியார். நான் காங்கிரஸில் 6 வருடங்கள் இருந்தேன். ஆனால் பெரியாரும் காங்கிரஸுக்கு எதிராக இருந்தவர்தான். நான் அப்போதும் பெரியாருக்கு ஆதரவாகத்தான் இருந்தேன். நான் தொடர்ந்து இருப்பேன். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com