“பிசிராந்தையார்- கோப்பெருஞ்சோழன்போல..’- ஸ்டாலின் குறித்து கே.எஸ்.அழகிரி
தானும், ஸ்டாலினும் கோப்பெருஞ்சோழனையும், பிசிராந்தையாரையும் போன்றவர்வர்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது குறித்து பேசிய கே.எஸ்.அழகிரி மீண்டும் ஒருமுறை மோடியும், அமித்ஷாவும் ஜனாநாயகத்தை படுகொலை செய்துள்ளனர் எனத் தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தல் இடங்கள் தொடர்பாக திமுகவிடம் பேசினீர்களா எனக் கேட்டதற்கு, “நானும் ஸ்டாலினும் கோப்பெருஞ்சோழனையும், பிசிராந்தையாரையும் போன்றவர்வர்கள். நாங்கள் பார்க்காமலேயே பேசிக்கொள்வோம். ஸ்டாலின் கோப்பெருஞ்சோழன், நான் பிசிராந்தையார். 17-ஆம் தேதி கட்சியினருடனான கூட்டத்திற்கு பின் பேசுவோம்” என்றார்.
மேலும் பேசிய அவர், “ தமிழகத்தில் வெற்றிடம் என்பது ரஜினியின் தவறான கருத்து. ஸ்டாலினின் தலைமைப் பண்பால்தான் தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளை பெற்றோம். மதுரா, காசி என அடுத்தடுத்த பிரச்சனைகளை கையில் எடுப்பார்களானால் அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்” எனத் தெரிவித்தார்.