
அதிமுக அணிகள் இணைப்புக்கு நான் தடையில்லை என ஓபிஎஸ் ஆதரவு கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக அணிகள் இணைப்பு குறித்து பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணியினர், அவரவர் ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனால் அதிமுக அணிகள் இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என தொண்டர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் எந்த முடிவும் வெளியாகவில்லை. கட்சி மற்றும் ஆட்சியில் பதவிகளை பிரிப்பதில் ஓபிஎஸ் அணியுடன் ஏற்பட்ட சிக்கலால் அணிகள் இணைப்பில் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவு கே.பி.முனுசாமி, கட்சியின் நடவடிக்கை குறித்து ஓபிஎஸ் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது என்றார். அதிமுக அணிகள் இணைப்புக்கு நீங்கள் முட்டுக்கட்டையாக இருப்பதாக சொல்லப்படுகிறதே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர்,
"நான் முட்டுக்கட்டையாக எதனப்படிடையில் இருக்கிறேன் என்பதை தெளிவாக சொன்னால் அதற்கு பதிலளிக்க முடியும். ஒரு கட்சியின் நலன் கருதி, அக்கட்சியில் பணியாற்றிய நிர்வாகிகளின் நலன் கருதி, அக்கட்சியில் உண்மையாக உழைக்கும் தொண்டர்களின் நலன் கருதி ஒரு அழுத்தமான நிலையில் நான் இருந்துக் கொண்டிருக்கிறேன். இதனை முட்டுக்கட்டை என்று சொல்லிவிட முடியாது. தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு பாதுகாப்பை ஏற்படுத்த தான் இந்த நிலையில் இருக்கிறேன். எங்களுடைய கோரிக்கை சசிகலா குடும்பம் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்பதே. வெளியேற்றப்படாத வரை வேறு எதுவும் சொல்வதற்கில்லை. தர்ம யுத்தமே தொடங்கியது அதற்காகத் தான். தர்ம யுத்தத்தின் மூலக்கரு நிறைவேறவில்லையெனில் எப்படி இரண்டு அணிகளும் பேசுவற்கு உரிய வாய்ப்பு இருக்கும் என்பது தெரியவில்லை. எவ்வாறாயினும் ஓபிஎஸ் முடிவுக்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடிய நிர்வாகிகளாக நாங்கள் இருக்கிறோம்" என்றார்.