15 பந்துகளில் 56 ரன்கள்.. பேட் கம்மின்ஸ் அதிரடியால் வீழ்ந்தது மும்பை

15 பந்துகளில் 56 ரன்கள்.. பேட் கம்மின்ஸ் அதிரடியால் வீழ்ந்தது மும்பை
15 பந்துகளில் 56 ரன்கள்..  பேட் கம்மின்ஸ் அதிரடியால் வீழ்ந்தது மும்பை

மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட் கம்மின்ஸ் அதிரடியாக அரை சதம் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

நடப்புத் தொடரில் வெற்றிக் கணக்கை தொடங்க வேண்டிய நெருக்கடியில் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இண்டியன்ஸ் அணி, ஸ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொண்டது.

புனேவில் நடந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணி, முக்கிய விக்கெட்களை இழந்து தடுமாறியது. கேப்டன் ரோகித் ஷர்மா 3 ரன்களிலும், பிரேவிஸ் 29 ரன்களிலும், இசான் கிஷன் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். எனினும் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டார். 20 ஓவர்களில் மும்பை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் சேர்த்து.

162 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய கொல்கத்தா அணியில், தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் நிதானமாக விளையாடியபோதிலும், மறுமுனையில் விக்கெட்கள் சரிந்த வண்ணம் இருந்தன. ரஹானே 7 ரன்களிலும், ஷ்ரேயாஸ் ஐயர் 10 ரன்களிலும் நடையைக் கட்ட, அடுத்த வந்த சாம் பில்லிங்ஸ் 17 ரன்களிலும், நிதிஷ் ராணா 8 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

13 புள்ளி ஒரு ஓவர்களில் 101 ரன்களை மட்டுமே எடுத்திருந்த கொல்கத்தா அணி, 5 முக்கிய விக்கெட்களை இழந்தது. மும்பை அணியே வெற்றி பெற வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்து வந்த பேட் கம்மின்ஸ் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே சிக்ஸர் விளாசினார். அடுத்த பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார். பும்ரா வீசிய 15ஆவது ஓவரிலும் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார் கம்மின்ஸ்.

30 பந்துகளில் 35 ரன்கள் தேவை என்ற நிலையில், 16ஆவது ஓவரை டேனியல் சாம்ஸ் வீசினார். சிக்ஸர் மற்றும் பவுண்டரி மழை பொழிந்த பேட் கம்மின்ஸ் 14 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். ஐபிஎஸ் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரை சதம் அடித்திருந்த கே.எல்.ராகுலின் சாதனையையும் சமன் செய்தார். கம்மின்ஸின் அதிரடியால் ஒரே ஓவரில் 35 ரன்கள் குவித்த கொல்கத்தா அணி, 4 ஓவர்கள் மீதமிருந்த நிலையிலேயே வெற்றி இலக்கை எட்டியது. வெங்கடேஷ் ஐயரும் ஆட்டமிழக்காமல் 41 பந்துகளில் அரைசதம் அடித்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

இதன் மூலம் 3 வெற்றிகளைப் பதிவு செய்து, புள்ளிகள் பட்டிலில் கொல்கத்தா அணி 3ஆவது இடத்திற்கு முன்னேறியது. ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக முறை பட்டம் வென்றுள்ள மும்பை இண்டியன்ஸ் அணி, நடப்புத் தொடரில் வெற்றிக் கணக்கை தொடங்க முடியாமல் தடுமாறுகிறது.

15 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் விளாசி இறுதி வரை களத்தில் இருந்த பேட் கம்மின்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் படிக்க: “தோனியிடம் இருக்கும் இந்த திறமை தினேஷ் கார்த்தியிடம் அப்படியே இருக்கு” - டு பிளெசிஸ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com