கொடைக்கானல்: நிரம்பி வழியும் கோணலாறு அணை... நீர் கசிவால் உடையும் அபாயம்

கொடைக்கானல்: நிரம்பி வழியும் கோணலாறு அணை... நீர் கசிவால் உடையும் அபாயம்
கொடைக்கானல்: நிரம்பி வழியும் கோணலாறு அணை... நீர் கசிவால் உடையும் அபாயம்

தடுப்பணையில் ஏற்பட்டுள்ள கசிவால் உடையும் அபாயத்தில் கொடைக்கானல் கோணலாறு அணை. போர்க்கால அடிப்படையில் குடிமராமத்து செய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானல் மன்னவனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கவுஞ்சி கிராமத்தில் மொத்தம் 2500 குடும்பத்தைச் சேர்ந்த 10,000 -க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். மழை காலங்களில் மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை தேக்கி வைக்க கோணலாறு அணையை கட்டித் தாருங்கள் என்று அப்போதைய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த சந்திரமௌலியிடம் மக்கள் கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கையை ஏற்று ஆய்வு செய்த ஆட்சியர், 1997ம் ஆண்டு ஆட்சியரின் பொது நிதியில் இருந்து தொகையை ஒதுக்கி அணையை கட்ட உத்தவிட்டார். இதனைத் தொடர்ந்து கவுஞ்சி மக்களின் உடல் உழைப்போடு 1998ம் ஆண்டு கம்பீரமாக உருவானது கோணலாறு டேம்.

கவுஞ்சி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த கோணலாறு அணையின் சட்டர் 2011ஆம் மிகவும் மோசமானது. அதனால் அணையின் சட்டரை சரிசெய்ய அப்போதைய மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த வள்ளலாரிடம் கோரிக்கை வைத்தனர் அவரும் நேரடியாக இங்கே வந்து ஆய்வு நடத்தினார்.

பின்னர் அணை மிகவும் பலவீனமாக இருக்கிறது இதை அப்படியே விட்டு விட்டு இதன் அருகிலேயே புதிதாக தடுப்பு அணையை கட்டுங்கள் என 70 லட்சம் ரூபாயை ஒதுக்கினார். அந்த பணம் என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்ற ஆண்டு தண்ணீருக்கு மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வந்த நிலையில், மழை பெய்ததால் அணையில் தண்ணீர் நிரம்பியது. அந்த தண்ணீரும் பாசம் பிடிச்சு பச்சை பசேல் என இருந்தது. இதைத்தான் குடித்து தாகத்தை தீர்த்து வந்தார்கள். 

மழையை நம்பி விதையை போட்ட மக்களை ஏமாற்றியது பருவமழை. ஆனால் வளர்ந்த செடியை காப்பாற்ற டிராக்டர் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றினர். தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்ட மக்களுக்கு இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்ததைவிட நன்றாக பொழிந்து இருக்கிறது. அதனால் அணையில் தண்ணீர் நிரம்பி இருக்கிறது.

ஆனால் அணையின் சட்டர் மிகவும் பாழடைந்து அதன் வழியாக தண்ணீர் கசிந்து ஓடிக்கொண்டே இருக்கிறது. அதேபோல அணையில் இருக்கும் கற்களின் வழியாகவும் நீர் கசிந்து போய்க்கொண்டே இருக்கிறது. இப்படியே விட்டால் இன்னும் கொஞ்ச நாளையில் கல் பெயர்ந்து வந்து விடும் எனவே சட்டரையும் அணையையும் சரிசெய்ய வேண்டும் என்று பல வருடங்களாக மக்கள் கோரிக்கை வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

 ஆனால் அரசும் அதிகாரிகளும் மக்களின் கோரிக்கையை ஏற்பதாக தெரியவில்லை. தொடர்ந்து கலெக்டர், ஆர்.டி.ஓ, தாசில்தார் என எல்லா அதிகாரிகளிடமும் மனு கொடுத்துவிட்டதாக கூறும் மக்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேணுகோபால், இப்போதைய சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் என எல்லோருக்கும் மனு கொடுத்துட்டோம் ஆனால் அந்த மனுமீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

அணை எந்த நேரத்திலும் உடையும் அபாயம் உள்ளது. எனவே அணையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரனிடம் மனு அளித்துள்ளதாகவும், அணையை பார்வையிட்டு அதனை சீரமைக்க உதவுமாறு அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து உதவி ஆட்சியரிடம் கேட்டபோது, அணையை விரைவில் நேரில் சென்று ஆய்வுசெய்ய இருப்பதாகவும், நிச்சயம் அணை காப்பாற்றப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

மழை இல்ல, தண்ணி இல்லாமல் விவசாயம் பொய்த்து விட்டது தண்ணிய தொறந்து விடுங்கன்னு கர்நாடாகா மாநிலத்தையும் கேரளா மாநிலத்தையும் கெஞ்சிக்கிட்டு இருக்கோம். இங்க நல்லா மழை பேஞ்சு, தேங்கி இருக்குற தண்ணிய காப்பாத்த முடியல. இப்பவே டேம்ல இவ்வளவு தண்ணி இருக்கு வடகிழக்கு பருவமழை அதிகமா இருக்கும்னு வானிலை மையம் எச்சரிக்கை வேற விட்டிருக்கு அதிகமா மழை பெய்தால் டேம் தாங்காது. உடைந்து எங்க ஊரே அழிந்து போகும் வாய்ப்பும் இருக்கு. அதனால அரசு போர்க்கால அடிப்படையில் விரைவாக செயல்பட்டு கோணலாறு அணையை சீர் செய்ய வேண்டும் என்பதே கவுஞ்சி கிராம மக்களின் ஒருமித்த கோரிக்கையாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com