நான் ரப்பர் ஸ்டாம்ப் ஆளுநரா?: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு கிரண்பேடி கேள்வி
முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவையில் பேசுகையில், சமூக வலைதளங்களில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீது ஊழல் புகார்களை ஆதாரமின்றி கூறி அவதூறு பரப்புவதை ஆளுநர் கிரண் பேடி நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார். இதற்கு பதில் தரும் வகையில் கிரண் பேடி தனது வாட்ஸ்அப் மூலம் வெளியிட்டுள்ள செய்தியில் முதல்வர் நாராயணசாமியின் குற்றச்சாட்டுக்கு பதில் கூறும் வகையில் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “ஒரு ஆளுநர் என்பவர் தனது விருப்பங்களுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என முதல்வர் கருதுகிறாரா?, எந்த விளக்கமும் பெறாமல் கோப்புகளுக்கு அனுமதி தரும் துணைநிலை ஆளுநர் இருக்க வேண்டுமா?, தகுதி, செயல்திறன் இல்லாத அதிகாரிகளுக்கு பணியிடங்கள் இல்லாத நிலையிலும் பதவி உயர்வு தர வேண்டுமா?, வெறும் பார்வையாளராக, ஆளுநர் மாளிகையில் பெருந்தொகையில் கிடைக்கும் சலுகைகளை அனுபவிப்பவராக இருக்க வேண்டுமா?, மக்களை சந்திக்காமல், அதிகாரிகளை கேள்வி கேட்காமல், தனித்து இருக்க வேண்டுமா?, ஆட்சியாளர்களை கூறுவதை பேசாமல் செயல்படுத்த வேண்டுமா?” என்று பல கேள்விகள் எழுப்பியுள்ளார்.
மேலும், யூனியன் பிரதேச சட்டத்தின்படி இருவருக்கும் பொறுப்புகளும், கடமைகளும் வகுக்கப்பட்டுள்ளன. இதில் முதல்வர் தான் தற்போது பணிவிதிகளை மீறி செயல்படுகிறார். புதுவை மக்களுக்கு ஒரே நம்பிக்கையாக ஆளுநர் மாளிகைதான் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.