ஐபிஎல் 2020: சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளின் பலம், பலவீனம் என்ன?
புள்ளிகள் பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ள பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளின் பலம், பலவீனம் என்ன?
2014 ஆம் ஆண்டுக்குப் பின் முதன் முறையாக ஹாட்ரிக் தோல்வி, நிலையற்ற ஓபனிங், மேல்வரிசை பேட்டிங்கில் பெரும் தடுமாற்றம் என சோதனை மேல் சோதனையாக சென்னை அணி துவண்டு வருகிறது.
தொடக்க வீரர் வாட்சனுக்கு சராசரியான ஃபார்ம் கூட ஒட்டவில்லை. காயத்திலிருந்து மீண்டுள்ள ராயுடுவும் முந்தைய ஆட்டத்தில் பெரிதாக சோபிக்கவில்லை. கேப்டன் தோனியும், ஜடேஜாவும் பேட்டிங்கில் சராசரியான ஃபார்முக்கு திரும்பியுள்ளனர். பந்து வீச்சில் சாம் கரண், தீபக் சாஹர், பிராவோ ஆறுதல் அளிக்கின்றனர்.
சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை சரிக்கத் தவறுவது சறுக்கலே. மேலும் இறுதி ஓவர்களில் சென்னை அணி அதிகளவில் ரன்களை வாரி வழங்குவதும், கேட்ச்களை தவற விடுவதும் பலவீனம்.
பஞ்சாப் அணியும் அடுத்தடுத்த இரு தோல்விகளால் துவண்டுள்ளது. கேப்டன் ராகுல், மயங்க் அகர்வால் அணிக்கு பேட்டிங் தூண்களாக உள்ளனர். பூரன் ஃபார்முக்கு திரும்பியுள்ளது பேட்டிங்கில் பக்க பலம்.
கருண் நாயர், மேக்ஸ்வெல் ஆகியோரின் மோசமான ஃபார்ம் அணிக்கு பலவீனம். பந்து வீச்சில் காட்ரெல், ஷமி, பிஷ்னோய் ஆகியோர் எதிரணியினருக்கு நெருக்கடி கொடுத்து வலு சேர்க்கின்றனர். ஆல்ரவுண்டர் கவுதம் ரன்களை வாரி வழங்கினாலும், பேட்டிங்கில் ஆறுதல். மேல் வரிசை வீரர்கள் தடுமாறினால் ஆட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல நிலையான பேட்டிங் வரிசை இல்லாதது அந்த அணிக்கு பெரும் சிக்கல்.
வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ள இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது