கேரளாவில் மார்க்சிஸ்ட் பேரணியில் பெட்ரோல் குண்டு வீச்சு
கேரளாவின் கன்னூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி பேரணியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை அடுத்து பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இருதரப்பினரிடையே அவ்வப்போது வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. இந்த வன்முறை சம்பவங்களில் இருதரப்பிலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக கன்னூர் மாவட்டத்தில் அதிக அளவிலான வன்முறை நிகழ்ந்து வருகின்றது.
இந்நிலையில், கன்னூரில் நேற்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சி பேரணியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. பாஜகவினர்தான் இந்த செயலில் ஈடுபட்டதாக மார்க்சிஸ்ட் கட்சி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதனிடையே, கன்னூர் மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் 4 பேர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து இன்னும் தெரியவரவில்லை.