முதல் ஆளாக வந்து வாக்குப்பதிவு செய்த பினராயி விஜயன்!
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.
மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை 2 கட்டங்களாக 186 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 3-ஆவது கட்டமாக 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்த மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
அதன்படி குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும், கேரளாவின் 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகா மற்றும் மகாராஷ்ட்ராவில் தலா 14 தொகுதிகளிலும், உத்தரப்பிரதேசத்தில் 10 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்று வருகிறது. சட்டீஸ்கரில் 7, ஒடிஷாவில் 6 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்காளம் மற்றும் பீகாரில் தலா 5 தொகுதிகளிலும் அசாமில் 4 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கோவாவில் 2 தொகுதிகளில், காஷ்மீர், தாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையுவில் தலா 1 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
கேரளாவில், அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், கண்ணூரில் உள்ள ஆர்.சி அமலா பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் மக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.