
சிறையில் இருந்து விடுதலையான சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் நீதி வெல்லும் என்று நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டு ஜாமீன் பெற்ற எம்.எல்.ஏ கருணாஸ் வேலூர் சிறையில் இருந்து இன்று காலை விடுதலையானார்.
முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரியை அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட கருணாஸ் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் சென்னையில் ஐபிஎல் போட்டியின் போது ரசிகர்களை தாக்கியதாக ஒரு வழக்குப் பதியப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளிலும், எழும்பூர் நீதிமன்றம் நேற்று கருணாஸுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இதனை தொடர்ந்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கருணாஸ் இன்று காலை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அவதூறாக பேசிய வழக்கில் தினமும் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் ஐபிஎல் போட்டியின்போது ரசிகர்களை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் கருணாஸுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. வேலூர் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கருணாஸ் எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை எதிர்கொள்வேன் எனக் கூறினார்.
மேலும் அவர், “தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நான் ஊடகங்களுக்கு பேட்டி கொண்டுத்ததும் சட்டமன்றத்தில் சபாநாயகரை சந்தித்து அனுமதிக் கேட்டதும் அதற்கு அனுமதி மறுத்ததும் அதை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்கள் நடத்தின போட்டி சட்டமன்ற கூட்டத்தில் நான் கலந்துக் கொண்டதும்தான் நான் கைது செய்யப்பட்டதற்கான காரணம். அரசு செய்கின்ற தவறுகளை நான் கண்டித்து பேசியனால், சுட்டிக்காட்டினால் சிறைவாசம். அரசு செய்கின்ற தவறுகளை ஆதரித்தால் அவர்களுக்கு சுகவாசம். இதுதான் நிலைமை.
சட்டத்திற்கு முன்னால் அனைவரும் சமம். புரட்சித்தலைவி அம்மாவையும் சட்டம் தண்டித்திருக்கிறது. சின்னம்மாவையும் சட்டம் தண்டித்துக் கொண்டிருக்கிறது. கருணாஸ் தண்டிக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் அரசுக்கு யார் தேவையோ அவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. எஸ்.வி.சேகர் செய்தது தவறு என்று உலகறியும். அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. மற்றொரு தலைவர் என்ன பேசினார் என்பதையும் உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. அவர் மீது சட்டம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதையும் உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இங்கே நடக்கின்ற ஒவ்வொரு அவலங்களையும் மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நிச்சயமாக மக்கள் இதற்கான நல்ல தீர்வை தருவார்கள்” என்றார்.
மேலும் “இந்த 8 ஆண்டுகளில் ஒரே ஒரு மேடையில்தான் ஒரு அதிகாரி செய்தத் தவறை சுட்டிக்காட்டினேன். படித்த அந்த அதிகாரி தரம்தாழ்ந்த செயல்களை செய்துக் கொண்டிருக்கிறார். பொய் வழக்குகளை புனைக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுங்கள் என்று மூத்த அதிகாரிகளிடம் நான் புகார் கொடுத்தேன். ஆனால் அத்தனை அரசு அதிகாரிகளும் ஒன்றாகச் சேர்ந்து, அரசும் ஒன்றாகச் சேர்ந்து என்மீதே வழக்குப் போடுகிறார்கள். நான் யார் மீது புகார் கொடுத்தேனோ அவர் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு என் மீது வழக்குத் தொடுக்கிறார்கள். நீதிமன்றத்தின் மீது ஒட்டுமொத்த மக்களுக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. எத்தனை வழக்குகள் வந்தாலும் நின்று எதிர்கொள்வோம். நீதி வெல்லும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்றார் கருணாஸ்.