பவள விழாவிலேயே சுழன்று கொண்டிருக்கும் கருணாநிதியின் மனம்: மு.க.ஸ்டாலின்
முரசொலியின் பவள விழாவில் கருணாநிதி பங்கேற்க இயலாமல் போனாலும் அவரது மனம் விழாவிலேயே சுழன்று கொண்டிருக்கும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் முரசொலிதான் கலைஞரின் மூத்த பிள்ளை எனக் குறிப்பிட்டுள்ளதோடு, திராவிட இயக்கத்தின் கொள்கை முழக்கமாக மட்டுமல்ல, தமிழர் நலம் காக்கும் உரிமைக் குரல் முரசொலி எனக் கூறியுள்ளார்.
வரும் 10,11-ஆம் தேதிகளில் முரசொலியின் பவளவிழா முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்படுவதாகவும், இது செப்டம்பரில் நடத்தப்படும் பெரியார்-அண்ணா ஆகியோரின் பிறந்த நாள் மற்றும் திமுகவின் தொடக்க நாளைக் குறிக்கும் முப்பெரும் விழாவின் முன்னோட்டமாக இருக்கும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விழாவில் வெளியிடப்பட உள்ள மலர் திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசால் நேர்த்தியாக தயாராகியுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விழாவில் திராவிடக் கழகத் தலைவர் வீரமணி, கம்யூனிஸ்ட் கட்சி மூத்தத் தலைவர் நல்லகண்ணு உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, இந்து என்.ராம் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பது குறித்தும் ஸ்டாலின் பெருமை தெரிவித்துள்ளார்.
இந்த விழாவில் கருணாநிதி பங்கேற்க இயலாமல் போனாலும், அவரது மனம் பவளவிழாவிலேயே சுழன்று கொண்டிருக்கும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கருணாநிதியின் மூத்த பிள்ளையான முரசொலியின் பவள விழாவில் கலந்து கொள்ள அலைகடலென திரண்டு வரும் அனைவரையும் வரவேற்க இளைய பிள்ளையாகிய தான் காத்துக் கொண்டிருப்பேன் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.