தருமபுரி மாவட்டத்தின் 43-வது ஆட்சியராக எஸ்.பி.கார்த்திகா பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனைத்தொடர்ந்து புதிய மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.கார்த்திகா, செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது “ தருமபுரி மாவட்டம் மலை பகுதிகள் அதிகம் கொண்ட மாவட்டமாக உள்ளதால், பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரில் வந்து தெரிவிப்பது கடினமாக உள்ளது. தற்போது கொரோனா சூழலை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அவர்கள் இருக்கும் இடத்திலிருந்தே செல்போன் செயலி மூலம் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும்.
இதன் மூலம் மலைப்பகுதிகளில் உள்ள மற்றும் தொலை தூரங்களில் உள்ள பொதுமக்கள் பயன் பெறுவார்கள். இதுபோன்று பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்தும், கட்டாயம் முகக் கவசம் அணிந்தும் கொரோனா பரவலை தடுக்க வேண்டும்.
பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் வழிகாட்டுதல்களை முழுமையாக கடைபிடித்து, ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் சமூக இடைவெளி மற்றும் முகக் கவசம் அணியாத பகுதிகளில் அபராதம் விதிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” என ஆட்சியர் எஸ்.பி.கார்த்திகா தெரிவித்தார்.