பிரச்சாரம் செய்யக் கூடாது: ஜனார்த்தன ரெட்டிக்கு உச்சநீதிமன்றம் செக்..!
கர்நாடக பாஜகவின் முன்னாள் அமைச்சரான ஜனார்த்தன ரெட்டி தனது சகோதரருக்கு ஆதரவாக தேர்தலில் பிரச்சாரம் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்த காளி ஜனார்த்தன ரெட்டி, சோமசேகர ரெட்டி ஆகியோர், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள். எடியூரப்பா ஆட்சியில் அமைச்சராக இருந்த ஜனார்த்தனரெட்டி மீது பெல்லாரி மாவட்டத்தில், பல ஆயிரம் கோடி அளவுக்கு கனிம வளங்களை சுரண்டியதாக வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதனால் ஜனார்த்தன ரெட்டி பதவி விலகினார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே உள்ளார். சகோதரர் ஜனார்த்தன ரெட்டி மீதான புகாரை விசாரிக்கும் நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, சோமசேகர ரெட்டி மீதும் வழக்கு உள்ளது. இந்த சட்டமன்றத் தேர்தலில், பெல்லாரி தொகுதியில் சோமசேகர ரெட்டிக்கு பாஜக சீட் வழங்கியுள்ளது.
ஜாமீனில் உள்ள ஜனார்த்தன ரெட்டி தனது சகோதரர் சோமசேகர ரெட்டிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்நிலையில் ஜனார்த்தன ரெட்டியின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அவரது கோரிக்கையை நிராகரித்து விட்டது. ஜாமீனில் பெல்லாரிக்குள் நடமாட ஜனார்த்தன ரெட்டிக்கு கட்டுப்பாடுகள் உள்ளதால் அவர் தனது சகோதரருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கையின் போது நாடே பணத்தட்டுப்பாட்டில் இருந்த போது, ஜனார்த்தன ரெட்டி தனது மகளின் திருமணத்தை ரூ.650 கோடி செலவில் பெங்களூர் அரண்மனையில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.