கர்நாடகாவில் துணை முதல்வர் பதவிக்கு வலுக்கும் போட்டி
கர்நாடகாவில் துணை முதல்வர் பதவி காங்கிரசுக்கு தரப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதை அடைய கடும் போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகத்தில் நடைப்பெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிக்கு தேர்தல் நடைப்பெற்றது. வாக்கு எண்ணிக்கையில் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் கர்நாடக அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. பாஜகவுக்கு 104இடங்களிலும், காங்கிரஸ் 78, மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனையடுத்து 104 பேர் ஆதரவுடன் எடியூரப்பாவும், காங்கிரஸ் உள்ளிட்ட 117 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக குமாரசாமியும் ஆட்சியமைக்க வஜுபாய் வாலாவிடம் உரிமை கோரினர். பாஜவை சேர்ந்த முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்கக் கோரி காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
காங்கிரஸின் மனுவை நள்ளிரவில் விசாரித்த நீதிமன்றம் எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது வழக்கை ஒத்திவைத்தது. ஆளுநர் அழைப்பின்படி எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்ற சில நிமிடங்களில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. அப்போது சில முக்கிய உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சில வழிமுறைகளை நீதிமன்றம் கூறியது. கடந்த 19ஆம் தேதி எம்எல்ஏக்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் எடியூரப்பா பதவி விலகியதைத் தொடர்ந்து, குமாரசாமியை ஆளுநர் வஜூபாய் வாலா ஆட்சியமைக்க அழைத்தார். குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசத்தையும் ஆளுநர் வழங்கியுள்ளார். இந்நிலையில் இன்று டெல்லி சென்று ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்திக்க குமாரசாமி முடிவு செய்துள்ளார். அப்போது அமைச்சரவையில் யார் யார் இடம்பெறுவது என்பது குறித்து அவர்களுடன் ஆலோசிக்க உள்ளார்.
இந்நிலையில் தலித் இனத்தவரும் மாநில காங்கிரஸ் தலைவருமான பரமேஸ்வராவுக்கு துணை முதல்வர் பதவி தரப்படும் எனத் தகவல்கள்
வெளியாகியிருந்தன. தெற்கு கர்நாடகாவை சேர்ந்தவரும் ஒக்கலிகா இனத்தவருமான குமாரசாமி முதல்வராக உள்ள நிலையில் துணை முதல்வர் பதவி மற்றொரு பெரிய சமூகமான லிங்காயத்துக்கு வழங்கப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சியிலிருந்து கோரிக்கைகள் வலுத்துள்ளன.
குறிப்பாக வட கர்நாடக பகுதியை சேர்ந்த லிங்காயாத் தலைவருககு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள் ளது. இதற்கிடையில் அகில பாரத வீரசைவ மஹாசபா அமைப்பு, தங்கள் அமைப்பின் தலைவர் சிவசங்கரப்பாவை துணை முதல்வராக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. பாஜக ஆட்சி அமைவதை தடுப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த டி.கே.சிவகுமாரும் துணை முதல்வருக்கான பதவியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.