நல்ல நேரம் பார்க்கும் ஆளுநர்? தாமதமாகும் அழைப்பு
கர்நாடகத்தில் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காததற்கு ராகு காலம் தான் காரணம் என்ற தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
கர்நாடகா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. தேர்தல் முடிவுகளில் பாஜக 104, காங்கிரஸ் 78, மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஆட்சி அமைக்க தேவையான மெஜாரிட்டி(113 தொகுதிகள்) எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனிடையே தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாவதற்கு முன்பே அவசரம் அவசரமாக காங்கிரஸ் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு தெரிவித்தது. பாஜக ஆட்சி அமைவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதல் அமைச்சர் பதவியை மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு விட்டுக் கொடுக்க காங்கிரஸ் முன்வந்தது.
ஆனால் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் எனக்கூறி, பாஜக முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து பேசினார். இதேபோன்று, காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் ஆளுநரை சந்தித்துள்ளன. ஆளுநர் யாரை ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி காணப்படுகிறது.
இதற்கிடையில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் “ கர்நாடக மாநில ஆளுநர் பாஜவின் எடியூரப்பாவைதான் ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பார் என்ற தகவல் எனக்கு வருகிறது” என்று பதிவிட்டிருந்தார். ஆனால் ஆளுநர் தற்போது வரை யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை.
ஆளுநர் அழைப்பு விடுக்காததற்கு ராகு காலம் தான் காரணம் என சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. இன்று நண்பகல் 12.16 - 1.58 வரை ராகு காலம் என்பதால் பிற்பகல் 2 மணிக்கு மேல் தான் அழைப்பு விடுப்பார் என்ற தகவல் பரவி வருகிறது.