காவிரி மேலாண்மை வாரியம் அமைய கர்நாடக அரசு ஒத்துக் கொள்ளாது - சித்தராமையா
காவிரி மேலாண்மை வாரியம் அமைய கர்நாடக அரசு ஒத்துக் கொள்ளாது என்று முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் தமிழகத்திற்கு உரிய நீரை உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்றும் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்துள்ளது.
கர்நாடகாவில் மே 12ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் முடியும் வரை உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நடைமுறைப்படுத்தாது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், காவிரி மேலாண்மை வாரியத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், மைசூரில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, காவிரி விவகாரத்தில் ‘உச்சநீதிமன்றம், மத்திய அரசு என்ன சொன்னதோ அதனை செயல்படுத்தினால் போதும்’ என்றார்.