சித்தராமையாவுக்கு மோடி சூட்டிய புதுப்பெயர்..!
கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் அனல் பறக்கும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் மே 12ம் தேதி வாக்குப்பதிவு நடை பெறவுள்ளது. பிரதமர் மோடி தனது இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரையை காலபரகியில் இன்று தொடங்கினார். அப்போது பேசிய மோடி, “கர்நாடகாவில் முன்பு பாஜக ஆட்சி அமைந்த போது, நிறைய வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதிக அளவில் நீர் வளம் இருந்த போதும் காங்கிரஸ் கட்சியால் தண்ணீர் பிரச்னையை கூட தீர்க்க முடியவில்லை” என்றார்.
மேலும், “கர்நாடகாவில் இருப்பது ‘சித்த-ரூபையா’அரசு. சிறிய வேலை கூட லஞ்சம், ஊழல் இல்லாமல் நடைபெறுவதில்லை. இந்த அரசால் கர்நாடக மாநிலத்திற்கு கடன்தான் மிஞ்சியுள்ளது. காங்கிரஸ் அரசு பெல்லாரியின் வரலாற்று சிறப்பையும் மரபையும் அழித்துவிட்டது” என்று மோடி விமர்சித்தார்.
காலபரகியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தை அடுத்து பெங்களூருவில் நடைபெறவுள்ள கூட்டத்தில் மோடி இன்று பேசவுள்ளார். மோடியை அடுத்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் சில தினங்களில் கர்நாடகாவில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.