‘காலா’ குறித்து கர்நாடகா முதல்வரிடம் பேசுவது தேவையற்றது: கமல்ஹாசன்

‘காலா’ குறித்து கர்நாடகா முதல்வரிடம் பேசுவது தேவையற்றது: கமல்ஹாசன்
‘காலா’ குறித்து கர்நாடகா முதல்வரிடம் பேசுவது தேவையற்றது: கமல்ஹாசன்

காவிரியை விட ‘காலா’ திரைப்படம் முக்கியமானது அல்ல என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் சூசகமாக தெரிவித்துள்ளார்.

காவிரிநீர் பங்கீடு தொடர்பாக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கர்நாடக முதல்வர் குமாரசாமியைச் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் என்பது சமீபத்தில் எனக்கு வந்த பொறுப்பு. அதற்கு 3 மாத வயதுதான் ஆகிறது. நான் இங்கே தமிழக மக்களின் பிரதிநிதியாக வந்துள்ளேன். குறுவை பயிரிடும் நேரம் வந்துவிட்டது. அதற்கான நீர்வரத்து தேவை. அதனை கேட்பதற்காகவும், நினைவூட்டுவதற்காகவுமே இங்கு வந்துள்ளேன். இப்போது காவிரி ஆணையம் அமைத்துள்ளார்கள். அதன் சொல்படி நடக்க வேண்டிய கடமை இருவருக்குமே உள்ளது. இந்தச் சந்திப்பிற்குப் பின் அதனை அவர்கள் சரியாக செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது. தேசமே எதிர்கொண்டுள்ள பல பிரச்னைகள் குறித்து இந்தச் சந்திப்பின் போது பேசினோம். நல்ல சந்திப்பாக இது அமைந்தது.  குமாரசாமி பேச்சில் பெருந்தன்மை தெரிந்தது. அதற்கு நன்றி. ஒரு பெரிய நீண்ட நட்பின் ஆரம்பமாக இது தெரிகிறது.  கூட்டணிக்காக சந்திப்பு அல்ல. மக்கள் நலன் குறித்த சந்திப்பாகவே அமைந்தது.” என்றார்.

‘காலா’ விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சரிடம் பேசினீர்களா? எனக் கேட்டதற்கு “நான்‘காலா’திரைப்படம் குறித்து இங்கு ஆலோசிப்பது தேவையற்றது. ‘காலா’ திரைப்படம் குறித்து ஒரு வார்த்தை கூட ‌நாங்கள் விவாதிக்கவில்லை. ‘காலா’ திரைப்படப் பிரச்னை குறித்து திரைப்பட வர்த்தக சபை, விநியோகிஸ்தர்கள் பார்த்துக் கொள்வார்கள். இரு மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவு குறித்தே நாங்கள் விவாதித்தோம். காவிரி பிரச்னையை விட திரைப்படங்கள் வெளியாவது குறித்த பிரச்னை முக்கியமல்ல” என தெரிவித்தார்.

பின்னர் பேசிய குமாரசாமி, “காவிரி விவகாரத்தில் இரண்டு மாநில‌ங்களும் இருதயப்பூர்வமாக சகோதர சகோதரிகள் போல் பிரச்னைக்கு தீர்வுக் காண வேண்டும் என்பது குறித்து என்னிடம் கமல் ஆலோசித்தார். என்ன பிரச்னை இருந்தாலும் அதை இரு மாநிலங்களும் சரி சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும். கர்நாடக விவசாயிகளும் முக்கியமானவர்கள், தமிழக விவசாயிகளும் முக்கியமானவர்கள்தான். எனவே, இருதயப்பூர்வமாக எவ்வித வேற்றுமையும் இன்றி இந்தப் பிரச்னைக்கு தீர்வுக் காண்போம்” என தெரிவித்தார்.

இதனிடையே கர்நாடகா முதலமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில், “ கமல்ஹாசனை சந்தித்து பேசியது மகிழ்ச்சியானது. காவிரி உள்பட அனைத்து பிரச்னைகளையும் சுமூகமாகப் பேசித் தீர்க்க முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள கமல்ஹாசன், “நெஞ்சை நெகிழ வைக்கும் சந்திப்பிற்கு நன்றி. கர்நாடகாவிற்கும் தமிழகத்திற்கும் இடையே என்னால் முடிந்தவரை ஒரு நம்பகமான பாலமாக இருப்பேன்” என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com