இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சிவனுக்கு திமுக எம்.பி கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’வின் தலைவராக ஏ.எஸ்.கிரண் குமார் பணியாற்றி வருகிறார். கடந்த 2015–ம் ஆண்டு ஜனவரியில் நியமிக்கப்பட்ட இவர், விரைவில் ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து, ‘இஸ்ரோ’ புதிய தலைவராக பிரபல விஞ்ஞானி கே.சிவன் நேற்று நியமிக்கப்பட்டார். விஞ்ஞானி கே.சிவன், தமிழ்நாட்டில் நாகர்கோவில் அருகே உள்ள சரக்கல்விளை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவர்.
இந்நிலையில் இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சிவனுக்கு திமுக எம்.பி கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ ‘இஸ்ரோ’வின் புதிய தலைவராக தமிழரான சிவன் நியமிக்கப்பட்டுள்ளது தமிழர்களை பெருமிதம் கொள்ளச் செய்துள்ளது. நாட்டின் கவுரவம் வாய்ந்த பொறுப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இஸ்ரோ தலைவர் பதவியை வகிக்கவுள்ள முதல் தமிழர் சிவன். இவர் தலைமையில் இஸ்ரோ பல்வேறு சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன்”என தெரிவித்துள்ளார்.