நெல்லை ஆட்சியர் மீது ஒழுங்கு நடவடிக்கை தேவை: கனிமொழி வலியுறுத்தல்
நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் ரத யாத்திரை காரணமாக நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ரத யாத்திரை தமிழகம் வருவதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வரும் 23-ஆம் தேதி வரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கனிமொழி, “ கலவரம் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே நடைபெறும் யாத்திரைதான் சங் பரிவார் அமைப்புகள் நடத்தும் ராம ராஜ்ய ரத யாத்திரை என்பது அனைவரும் அறிந்ததே. அமைதி மாநிலமாக உள்ள தமிழகத்தில் வகுப்புவாத சக்திகள் காலூன்றுவதை அனுமதிக்காமல் தடுக்க வேண்டியது ஒவ்வொரு தலைவர் மற்றும் அதிகாரியின் கடமை. ஆனால் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி நடக்க வேண்டிய நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பிறப்பித்துள்ள தடை உத்தரவு, அவர் அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி நடக்கிறாரா, அல்லது சங் பரிவார அமைப்புகளின் உத்தரவின்படி நடக்கிறாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
நேற்று நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவில், ரத யாத்திரைக்கு ஒரு சிறு குந்தகம் ஏற்பட்டாலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும், அப்படி ரத யாத்திரையில் சிக்கலை உருவாக்க சிலர் திட்டமிட்டுள்ளதால், 144 தடைச் சட்டம் பிறப்பித்துள்ளதாக தெரிவித்தார். பாரபட்சமற்று செயல்பட்டு, அரசியல் அமைப்புச் சட்டத்தையும், அடிப்படை உரிமைகளையும் காப்பாற்ற வேண்டிய ஐஏஎஸ் அதிகாரி சந்தீப் நந்தூரி மத உணர்வோடு, ஒரு மதத்துக்கு ஆதரவாகவும், கலவரத்தை தூண்டுவோருக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவு, வன்மையாக கண்டிக்கத்தக்கது. நடத்தை விதிகளை மீறி செயல்பட்டுள்ள நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மீது தமிழக அரசு உடனடியாக அகில இந்திய அதிகாரிகள் நடத்தை விதிகளின்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.